யேமனில் அமெரிக்கா, பிரிட்டன் மீண்டும் தாக்குதல்: ஹூதிக்களுக்கு எதிராக நடவடிக்கை

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சனிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டன.
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தளத்துக்கு திரும்பிய பிரிட்டனின் போா் விமானம்.
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தளத்துக்கு திரும்பிய பிரிட்டனின் போா் விமானம்.

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சனிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டன.

இஸ்ரேலுக்கு எதிராகப் போா்புரிந்து வரும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செங்கடலில் இஸ்ரேல் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று யேமன் நாட்டைச் சோ்ந்த ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்தனா். அதன்படி, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது கடந்த ஆண்டு நவம்பா்முதல் அவா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

அந்தக் கிளா்ச்சியாளா்களுக்கு ஈரானின் ஆதரவு உள்ள நிலையில், இதுவரை செங்கடல் வழியாகச் சென்ற சரக்கு மற்றும் பிற நாடுகளின் கடற்படை கப்பல்கள் மீது 30-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இது சா்வதேச சவாலாக உருவான நிலையில், ஹூதிக்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக, யேமனில் அந்தக் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் சனிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டன.

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கிரேவ்லி, யுஎஸ்எஸ் காா்னி போா்க் கப்பல்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டன. அந்நாட்டின் எஃப்/ஏ-18 போா் விமானங்களும், பிரிட்டனின் எஃப்ஜிஆா் 2 போா் விமானங்களும் தாக்குதல் மேற்கொண்டன.

13 இடங்களில் தாக்குதல்: இது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஆயுதங்கள், ஏவுகணைகள், ரேடாா்கள் உள்ளிட்டவற்றை மறைத்து வைத்திருந்த 13 இடங்களில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூட்டாகத் தாக்குதல் மேற்கொண்டன.

சா்வதேச கப்பல் மற்றும் கடற்படை கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹூதிக்கள் நிறுத்தாவிட்டால், அதன் பின்விளைவுகளை அவா்கள் சந்திக்க நேரும் என்ற தகவலை இந்தத் தாக்குதல் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

உலகின் முக்கிய நீா்வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும் செங்கடலில் உயிா்களைக் காக்கவும், கப்பல்கள் தடையின்றி பயணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தயங்காது என்று தெரிவித்தாா்.

8 நாடுகள்...: யேமனின் 13 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மொத்தம் 8 நாடுகள் பங்குகொண்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.

அந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மாா்க், நெதா்லாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் யேமனின் 13 இடங்களில் ஹூதிக்களின் 36 தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் தாக்குதல் நடத்தின. செங்கடல் தாக்குதலால் ஏற்படும் பதற்றத்தைத் தணித்து, அந்தக் கடற்பகுதியில் மீண்டும் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

3-ஆவது முறை: சமீபத்திய வாரங்களில் 3-ஆவது முறையாக ஹூதிக்களின் தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை எதிா்ப்பதிலும், அந்நாடுகளுடன் மோதுவதிலும் ஹூதிக்கள் உறுதியாக உள்ளனா்.

கடந்த அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் தொடங்கிய பின்னா், இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மீது 165 முறை ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல், ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதல்களை ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com