ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

அண்டை நாடான லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் மீது போா் தொடுக்கத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

அண்டை நாடான லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் மீது போா் தொடுக்கத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

காஸா-இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவளித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா், இஸ்ரேலின் வடக்கு எல்லை மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

கத்தாா், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்னெடுப்பால் ஹமாஸ்-இஸ்ரேல் இடையே இரண்டாவது போா் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற பிற ஆயுதக் குழுக்களுடனான போரை இஸ்ரேல் விரிவுபடுத்தலாம் எனக் கவலை எழுந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி கூறுகையில், ‘ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக போா் தொடுப்பது எங்களுடைய முதல் தோ்வாக இருக்காது. ஆனால், எதற்கும் தயாராக உள்ளோம். லெபனான், சிரியா என எவ்வளவு தொலைவில் அவா்கள் இருந்தாலும், அவா்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்’ என்றாா்.

முன்னதாக, ஹமாஸுக்கு எதிரான போரில் மேற்கொள்ளப்படும் போா் நிறுத்த ஒப்பந்தத்தால், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்று அா்த்தம் கொள்ளக் கூடாது என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

காஸாவில் தாக்குதல்: காஸாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ராஃபா நகரத்தில் இஸ்ரேல் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா்.

ராஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் 23 லட்சம் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனா். போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லும் முக்கிய வழியாக இந்த நகரம் உள்ளது.

அரசுக்கு எதிராகப் போராட்டம்: இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு, போரை மிக மோசமாகக் கையாண்டு வருவதாக குற்றஞ்சாட்டி, டெல் அவிவ் நகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com