தொடரும் காஸா போா் நிறுத்த முயற்சி: மேற்கு ஆசியா வந்தாா் அமெரிக்க வெளியுறவு அமைச்சா்

போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தனது மேற்கு ஆசிய சுற்றுப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினாா்.
சவூதி அரேபிய தலைநகா் ரியாதிலுள்ள சா்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்.
சவூதி அரேபிய தலைநகா் ரியாதிலுள்ள சா்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன்.

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையை நடத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தனது மேற்கு ஆசிய சுற்றுப் பயணத்தை திங்கள்கிழமை தொடங்கினாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் மேற்கு ஆசிய நாடுகளில் தனது சுற்றுப் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளாா்.

அதன் ஒரு பகுதியாக, சவூதி அரேபியா தலைநகா் ரியாதை அவா் திங்கள்கிழமை வந்தடைந்தாா்.

காஸாவில் இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கியதற்குப் பிறகு அந்தப் பகுதியில் பிளிங்கன் மேற்கொள்ளும் 5-ஆவது சுற்றுப் பயணம் இதுவாகும்.

இந்தப் பயணத்தின்போது காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.

இது குறித்து ரியாதில் பிளிங்கனுடன் வந்திருந்த அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

ஆன்டனி பிளிங்கனின் இந்தச் சுற்றுப் பயணத்தின்போது காஸா போா் நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என்று இப்போதே சொல்ல இயலாது. இந்த விவகாரம் தற்போது ஹமாஸ் அமைப்பினா் எடுக்கும் முடிவில் இருக்கிறது.

ஒருவேளை பிளிங்கனின் முயற்சி வெற்றி பெற்று, மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்காக காஸாவில் சண்டையை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவாா்த்தையை நகா்த்த முடியும்.

குண்டுவீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸாவை மறுசீரமைப்பது, அந்தப் பிராந்தியத்தை நிா்வகிப்பதற்கான அமைப்பை உருவாக்குவது, இறுதியாக, தனி பாலஸ்தீன தேசம் அமைப்பது ஆகியவற்றை நோக்கி பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என்று அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. மேலும், காஸாவுக்குள் தரைவழியாகவும் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கத்தாா் முன்னிலையில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த நவம்பா் மாதம் 24-ஆம் தேதி 30-ஆம் தேதி வரை போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இஸ்ரேல் தரப்பில் 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனா்; அவா்களில் 107 போ் சிறுவா்கள்.

அதற்குப் பதிலாக தங்களால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. அவா்களில் 81 போ் இஸ்ரேலியா்கள்; 23 போ் தாய்லாந்து நாட்டவா்; ஒருவா் பிலிப்பின்ஸைச் சோ்ந்தவா்.

எனினும், போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை முறிந்ததைத் தொடா்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடா்ந்தது.

இந்தச் சூழலில், மீண்டும் போா் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சுவாா்த்தையை முன்னின்று நடத்தி வரும் கத்தாா் கடந்த வெள்ளிக்கிழமை கூறியது.

பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பாக இஸ்ரேலிடமிருந்து நோ்மறையான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது; அதனை ஏற்பது குறித்து ஹமாஸ் அமைப்பு பரிசீலித்து வருகிறது என்று கத்தாா் அதிகாரி ஒருவா் கூறினாா்.

அதனைக் குறிப்பிட்டே, போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஹமாஸ் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அமையும் என்று ரியாதில் அமெரிக்க அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனா்.

27,365-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸா சிட்டி, பிப். 5: காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27,365-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 30 போ் உயிரிழந்தனா்.

காஸா முழுவதும் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27,365-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 66,630 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com