தேர்தல் தலையீடு வழக்கிலிருந்து டிரம்ப்புக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது

கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியை மாற்றியமைக்க முயன்றாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது.
தேர்தல் தலையீடு வழக்கிலிருந்து டிரம்ப்புக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது

வாஷிங்டன்: கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க முடியாது என்று அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இது குறித்து கொலம்பியா மாவட்ட முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிபர் பதவியில் இருந்தவர்களின் செயல்பாடுகள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து விதிவிலக்குக்கு உள்பட்டவை. என்றாலும், அத்தகைய விதிவிலக்குகளை டிரம்ப் செயல்பாடுகளின் குற்றவியல் தன்மை விஞ்சுவதாக அமைந்துள்ளது.

எனவே, 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக விசாரிக்கப்படுவதிலிருந்து அவருக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அதில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஆதரமற்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து சுமத்தி வந்தார்.

தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து "திருடி'க்கொண்டதாக டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது.
எனினும், அந்த நிகழ்ச்சி நடத்தவிடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com