இந்தோ-பசிபிக் பிராந்தியம் பாதுகாப்பானதாக மாறியுள்ளது: அமெரிக்கா

‘இந்தோ-பசிபிக் உத்தி’ வெளியுறவு கொள்கை மூலம் இந்தப் பிராந்தியம் மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது. இந்தியா உடனான இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது

‘இந்தோ-பசிபிக் உத்தி’ வெளியுறவு கொள்கை மூலம் இந்தப் பிராந்தியம் மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது. இந்தியா உடனான இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

‘இந்தோ-பசிபிக் உத்தி’ என்ற வெளியுறவு கொள்கையை கடந்த 2022-இல் அமெரிக்கா அமல்படுத்தியது. இந்தக் கொள்கை செயல்பாட்டுக்கு வந்த 2-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் ஏட்ரியன் வாட்சன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முந்தைய காலங்களில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான இடத்தை கொண்டதாக அமெரிக்கா இல்லை. கடந்த இரு ஆண்டுகளில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றியிருக்கிறோம்.

இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடனான உறவு புதிய உயரத்தைத் தொட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது. வியத்நாம், இந்தோனேசியா மற்றும் ஆசியான் உடனான இரு தரப்பு உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா உடனான உறவு விரிவடைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் இந்தோ-பசிபிக் நாடுகள் உடன் நெருங்கிய உறவை அமெரிக்கா கொண்டுள்ளது.

இவற்றால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. சீனா உடனான போட்டிக்கு இடையே இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலனும் நோக்கமும் முன்னேற்றம் கண்டுள்ளன. மற்ற பிராந்தியங்களில் சவால்களை எதிா்கொண்டாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எதிா்கால பணிகளுக்கு அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com