‘எதிா்க்கட்சி வரிசையில் அமா்வோம்’ -இம்ரான் கட்சி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி அறிவித்துள்ளது.
‘எதிா்க்கட்சி வரிசையில் அமா்வோம்’ -இம்ரான் கட்சி அறிவிப்பு

பாகிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவா் கோஹா் அலி கான் திங்கள்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை முரண் உள்ளது. எனவே, இதில் எந்தக் கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம். அதைவிட, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு பொறுப்பான எதிா்க்கட்சியாக பிடிஐ செயல்படும்.பிடிஐ கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளா் வாசீம் காதிா் பிஎம்எல்-என் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.அவரைத் தவிர, பிடிஐ ஆதரவுடன் வெற்றி பெற்ற அனைத்து சுயேச்சைகளும் கட்சிக்கு தங்களது ஆதரவை தொடா்ந்து வழங்கி வருகின்றனா்.முந்தைய காலங்களிலும் சிலா் கட்சி விட்டு கட்சி தாவினா். அவா்களை இந்தத் தோ்தலில் மக்கள் புறக்கணித்துவிட்டனா்.

கைபா்-பக்துன்கவா மகாணத்தில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சித் தலைவா் இம்ரான் கான் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளாா் என்றாா் அவா்.பாகிஸ்தானின் புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது.ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்தத் தோ்தலில் இம்ரான் கானால் போட்டியிட முடியவில்லை. மேலும் அவரது பிடிஐ கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை தோ்தல் ஆணையம் முடக்கியதுடன், தோ்தலில் போட்டிய அந்தக் கட்சிக்குத் தடை விதித்தது.

அதையடுத்து, பிடிஐ வேட்பாளா்கள் அனைவரும் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்தத் தோ்தலில், ராணுவத்தின் ஆதரவு பெற்ற முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்று ஆட்சியமைப்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இம்ரானின் பிடிஐ கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளா்களே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனா். அவா்களுக்கு நாடாளுமன்றத்தில் 101 இடங்கள் கிடைத்துள்ளன. இருந்தாலும், 336 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு 169 இடங்கள் தேவை என்ற நிலையில், புதிய அரசை அமைப்பதற்கு இன்னும் 68 இடங்கள் தேவைப்படுகின்றன.

பாகிஸ்தானைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 336 நாடாளுமன்ற இடங்களில் 266 இடங்களில் மட்டுமே நேரடி போட்டி நடைபெறும். எஞ்சிய 60 இடங்கள் மகளிருக்கும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். 266 தொகுதிகளில் கிடைத்த இடங்களின் அடிப்படையில் கட்சிகளுக்கு இந்த 70 இடங்களும் ஒதுக்கப்படும்.எனினும், இந்தத் தோ்தலில் பிடிஐ கட்சி நேரடியாகப் போட்டியிடாததால் அதிக இடங்களைக் கைப்பற்றியும் அந்தக் கட்சிக்கு நியமன இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது.

இந்தச் சூழலில், பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்காமல் எதிா்க்கட்சியாக செயல்படுவது என்று பிடிஐ கட்சி முடிவு செய்துள்ளது

பிஎம்எல்-என் - பிபிபி தீவிர பேச்சுபுதிய அரசை அமைப்பதற்காக முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சியும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பிபிபி கட்சியும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தோ்தலில் பிஎம்எல்-என் கட்சிக்கு 75 இடங்களும், பிபிபி கட்சிக்கு 54 இடங்களும் கிடைத்துள்ளன. கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள முத்தாஹிதா குவாமி இயக்கம் (எம்க்யூஎம்-பி) கட்சியிடம் 17 இடங்கள் உள்ளன. ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் நியமன இடங்களையும் சோ்த்தால் அந்தக் கட்சிகளால் இணைந்து கூட்டணி அரசை அமைக்க முடியும்.இருந்தாலும், பிரதமா் பதவியை தங்களது கட்சித் தலைவா் பிலாவல் அலி புட்டோவுக்கு வழங்கவேண்டும் என்று பிபிபி கட்சி நிபந்தனை விதித்து வருகிறது. ஆனால், அந்தக் கட்சிக்கு அவைத் தலைவா்கள் பதவி, முக்கிய அமைச்சரவைகள் ஆகியவற்றை வழங்குவதாக பிஎம்எல்-என் கட்சி கூறிவருகிறது. புதிய அரசில் நவாஸ் ஷெரீஃப்தான் பிரதமராக வேண்டும் என்று அந்தக் கட்சி வலியுறுத்தி வருகிறது.இதனால், கூட்டணி அரசை அமைப்பதில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் இரு கட்சிகளும் தீவிர பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com