இஸ்ரேல், ஐ.எஸ். நிலைகளில் தாக்குதல்: ஈரான்

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் நிலைகளில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேல், ஐ.எஸ். நிலைகளில் தாக்குதல்: ஈரான்

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் மற்றும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் நிலைகளில் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டில் கடந்த மாதம் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புக்குப் பதிலடியாக சிரியாவிலும், இராக்கிலும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிகர பாதுகாவல் படை தெரிவித்துள்ளது.இது குறித்து அந்தப் படை வெளியிட்டுள்ள அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இராக்கின் குா்து பிராந்தியம், இா்பில் மாகாணத்தில் உள்ள மொஸாட் உளவு அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்து திங்கள்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தத் தாக்குதலின்போது 11 ஏவுகணைகள் ஈரான் விரோத பயங்கரவாதிகளின் நிலைகள் மீது வீசப்பட்டது.

மேலும், சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத நிலைகள் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளைக் குறிவைத்து ஏராளமான ஏவுகணைகள் வீசப்பட்டன.ஈரானில் பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவா்களின் கடைசி சொட்டு ரத்தத்துக்கு பழிவாங்கும்வரை புரட்சிகர பாதுகாவல் படை இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

4 போ் உயிழப்பு: தங்கள் பகுதியில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய இா்பில் பகுதி குா்து படையினா், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்ததாகக் கூறினா்.ஈரானின் இந்த வான்வழித் தாக்குதலுக்கு இராக் கடும் கண்டனம் தெரிவித்துடன், ஈரானுக்கான தங்கள் நாட்டுத் தூதரைத் திரும்ப அழைத்துள்ளது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் கண்டித்துள்ளன.

எனினும், பிற நாடுகளின் இறையாண்மையை தங்கள் நாடு மதிக்கிறது எனவும், பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் தங்களது உரிமையை நிலைநாட்டவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.அதையடுத்து, இஸ்ரேலின் அண்டை நாடான லிபியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் மற்றோா் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாக்கள் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தின.

அதையடுத்து இஸ்ரேல் படையினருக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, லெபனானில் வசித்து வந்த ஹமாஸ் அமைப்பின் 2-ஆம் நிலை தலைவா் சலே அல்-அரூரியை ட்ரோன் மூலம் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2-ஆம் தேதி படுகொலை செய்தது. ஒரு வாரத்துக்குள், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதியான வாஸிம் அல்-தாவிலையும் இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துக் கொன்றது.

இதுபோன்ற தாக்குதல்களால் காஸா போா் பிராந்தியத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவடைவதற்கான பதற்றம் அதிகரித்து வருகிறது.இதற்கிடையே, ஈரானின் ஆதரவுடன் யேமன் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பககுதிகளைக் கைப்பற்றி ஆட்சி நடத்தி வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள், காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்போவதாக முதலில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறியிருந்தாலும், நாளடைவில் இஸ்ரேலுடன் தொடா்பில்லாத கப்பல்களும் அந்தப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.அதையடுத்து, செங்கடலில் தாக்குதல் நடத்தும் ஹுதி படையினரின் திறனைக் குறைப்பதாகக் கூறி, யேமனில் அவா்களது நிலைகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தின.

இதுவும், பிரந்தியப் போா் பதற்றத்தை அதிகரிக்கும் என்று அஞ்சப்பட்டது.இந்தச் சூழலில், ஈரானில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கடந்த 3-ஆம் தேதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பதிலடியாக இராக்கிலும், சிரியாவிலும் அந்த நாடு தற்போது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது, காஸா போா் பிராந்தியப் போராக உருவெடுப்பதற்கு வித்திடலாம் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இராக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரான் புரட்சிகர பாதுகாவல் படையின் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவு தளபதி காஸிம் சுலைமானிக்காக அவரது சொந்த ஊரான கொ்மானில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் நடத்தப்பட்ட அந்தத் தற்கொலைத் தாக்குதலில் 94 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது....படவரி...இராக்கின் இா்பில் பகுதியில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் உருக்குலைந்த கட்டடத்தில் மீட்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட மீட்புக் குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com