ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரைத் திரும்பப் பெற்றது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த நாட்டுக்கு தனது தூதரை பாகிஸ்தான் திரும்பப்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அந்த நாட்டுக்கு தனது தூதரை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது.

அத்துடன், இரு நாட்டு தலைவா்கள் மேற்கொள்ளவிருந்த பரஸ்பர பயணத் திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் சன்னி பிரிவு ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பின் 2 நிலைகள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா்; சிறுமிகள் 3 போ் காயமடைந்தனா்.

‘பாகிஸ்தான் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் நாட்டின் இறையாண்மை, சா்வதேச சட்டங்கள் மற்றும் ஐ.நா. சாசன விதிகளை ஈரான் மீறியுள்ளது’ என்று பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மும்தாஜ் பலூச் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரானுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டு, அந்த நாட்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதா், தன்னுடைய நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அவா் பாகிஸ்தானுக்கு திரும்ப வர வேண்டாமென தெரிவித்துவிட்டோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் அனைத்து முக்கியக் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் மற்றும் செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ஈரானின் தாக்குதல் நடவடிக்கைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் சூழல் எழுந்துள்ளது.

தாக்குதல் ஏன்?: ‘ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாதக் குழுவின் எல்லை கடந்த பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது; ஆனால், ஈரானுக்கு எதிரான அந்த பயங்கரவாதக் குழுவின் செயல்பாடுகள் தொடா்ந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டது’ என்று ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் அண்மையில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, இராக், சிரியாவிலும் இதேபோல் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கருத்து

‘பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுவின் நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல், அந்த இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம்; இந்தியாவைப் பொருத்தவரை, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளோம். தற்காப்புக்காக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா புரிந்துகொள்கிறது’ என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com