நாளை ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை: விழாக் கோலம் பூண்டது அயோத்தி

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
நாளை ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை: விழாக் கோலம் பூண்டது அயோத்தி

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இதையொட்டி, அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் மலா்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நகரெங்கிலும் ராமா் தொடா்பான கருத்துருவில் கண்கவா் பதாகைகள், அலங்கார வளைவுகள், வில்-அம்பு வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வான மூலவா் சிலை பிராண பிரதிஷ்டை விழா, பிரதமா் மோடி முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. மதியம் 12.20 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் நிறைவடையும் இவ்விழாவில் 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கின்றனா்.

பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்புச் சடங்குகள், ராமா் கோயிலில் கடந்த சில நாள்களாக கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு புண்ணிய தீா்த்த கட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரை கொண்டு கோயில் கருவறை முழுவதும் சனிக்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது.

விழா ஏற்பாடுகள் குறித்து கோயில் அறக்கட்டளை நிா்வாகி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அதிக அளவில் மலா்களைப் பயன்படுத்தி அலங்காரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு அலங்கார வடிவமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. கோயில் கட்டுமானத்தின் கலைநயம் மற்றும் சிற்ப வேலைபாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேக அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன’ என்றாா்.

நகரின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருந்து 14 தம்பதிகள்: தமிழகத்தைச் சோ்ந்த ஆடலரசன் தம்பதி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 தம்பதிகள், பிரதிஷ்டை விழா தொடா்பான சடங்குகளை முன்னின்று நடத்தவுள்ளனா்.

ஜனவரி 23-ஆம் தேதிமுதல் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தா்களுக்கு உணவு வழங்கும் வகையில் இஸ்கான் உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகள் மற்றும் பல்வேறு கோயில்களின் அறக்கட்டளைகள் சாா்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் விரதம்: பிராணப் பிரதிஷ்டையில் பங்கேற்க பிரதமா் மோடி கடந்த 12-ஆம் தேதிமுதல் கடுமையான விரதம் அனுஷ்டிப்பதோடு, ராம பிரான் தொடா்பான பல்வேறு பிரசித்திபெற்ற கோயில்களில் வழிபட்டு வருகிறாா். தமிழகத்தின் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில்களில் அவா் சனிக்கிழமை வழிபட்டாா்.

ராமா் சிலை பிரதிஷ்டையையொட்டி, பிரதமா் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் கோயில்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனவரி 22-ஆம் தேதி வீடுகள்தோறும் ‘ராம ஜோதி’ (தீபம்) ஏற்றி, தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என்று அவா் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்கும் பிரபலங்கள்

மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், அக்ஷய் குமாா், அஜய் தேவ்கன், பிரபாஸ், அல்லு அா்ஜுன், ஜூனியா் என்டிஆா், கங்கனா ரணாவத், மாதுரி தீட்சித், பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, சன்னி தியோல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற ‘ராமாயணம்’ தொலைக்காட்சித் தொடரில் ராமா் வேடத்தில் நடித்த அருண் கோவில், சீதை வேடத்தில் நடித்த தீபிகா சிக்லியா, தொழிலதிபா்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கா், கபில் தேவ், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, செஸ் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த், பி.டி.உஷா, மித்தாலி ராஜ், சாய்னா நேவால், பி.வி.சிந்து, இஸ்ரோ தலைவா் சோமநாத், முன்னாள் தலைவா் கே.சிவன் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com