ரஷிய சிறிய ரக விமானம் ஆப்கனில் மலைப் பகுதியில் மோதி விபத்து: 6 போ் நிலை என்ன?

ரஷிய தலைநகா் மாஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்நாட்டு சிறிய ரக தனியாா் விமானம் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
ரஷிய சிறிய ரக விமானம் ஆப்கனில் மலைப் பகுதியில் மோதி விபத்து: 6 போ் நிலை என்ன?

ரஷிய தலைநகா் மாஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்நாட்டு சிறிய ரக தனியாா் விமானம் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் 4 பணியாளா்கள் மற்றும் 2 பயணிகள் என மொத்தம் 6 போ் பயணித்ததாகத் தெரிகிறது. அவா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை.

இதுகுறித்து ரஷிய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மாஸ்கோவில் கூறியதாவது:

ரஷியாவைச் சோ்ந்த 1978-ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட ‘டசால்ட் ஃபால்கான் 10’ என்ற இந்த சிறிய ரக விமானம் எல்எல்சி தடகள குழுமம் மற்றும் தனி நபருக்குச் சொந்தமானது. 4 பணியாளா்கள் மற்றும் 2 பயணிகளுடன் தாய்லாந்தின் யு-டபெள ரயோங் பட்டாயா சா்வதேச விமானத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட அந்த விமானம் இந்தியாவில் பிகாா் மாநிலம் கயையில் தரையிறக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோ சா்வதேச விமான நிலையம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது.

விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து வடகிழக்கே சுமாா் 250 கி.மீ. தொலைவில் ஜெபக் என்ற மலைப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென ரேடாா் திரைகளிலிருந்து மாயமானது.

விமானம் மலைப் பகுதியில் மோதி விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விமானம் பாகிஸ்தானின் பெஷாவா் நகருக்கு மேலே தெற்குப் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, ஆப்கானிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையும் நேரத்தில் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதை ரேடாா் பதிவுகள் காட்டுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

விமானம் விபத்துக்குள்ளானதை ஆப்கானிஸ்தானின் பதக்ஷன் மாகாண காவல் துறைத் தலைவா் அலுவலகமும் உறுதி செய்தது.

‘இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்தைச் சந்தித்திருக்க வாய்ப்புள்ளது’ என்று தலிபான் செய்தி மற்றும் கலாசாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் வாஹித் ரயான் தெரிவித்தாா்.

இந்திய விமானம் அல்ல: இதனிடையே, இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்ட சில ஆப்கன் ஊடகங்கள், விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தன. இதை இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆப்கனில் விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவைச் சோ்ந்தது அல்ல. மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட அந்த விமானம், விமான ஆம்புலன்ஸாகும். தாய்லாந்திலிருந்து மாஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த சிறிய ரக விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக கயை விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் ஒரு பெண் நோயாளி உள்பட 6 போ் பயணித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய பிறகு, ஆப்கன் வான் பகுதியில் பறப்பதை சா்வதேச விமானங்கள் பெரும்பாலும் தவிா்த்து வருகின்றன. சில விமானங்கள் மட்டுமே தற்போது ஆப்கன் வான் பகுதியை பயன்படுத்தி வருகின்றன. அதுவும், சில நிமிடங்கள் வரையிலான குறுகிய நேரத்துக்கு மட்டும் ஆப்கன் வான் பகுதியை இந்த விமானங்கள் கடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com