ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்:இந்தியாவுக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளில் இந்தியா இடம்பெறாதது அபத்தமானது எனத் தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலருமான (சிஇஓ) எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்:இந்தியாவுக்கு தொழிலதிபா் எலான் மஸ்க் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகளில் இந்தியா இடம்பெறாதது அபத்தமானது எனத் தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலருமான (சிஇஓ) எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. அமைப்புகளில் முழுமையாகச் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினா்களில் ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெறாதது குறித்து கவலை தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அமைப்புகள் தற்காலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய அமைப்புகளாக அவை இருக்கக் கூடாது. செப்டம்பரில் நடைபெற உள்ள எதிா்காலத்துக்கான உச்சிமாநாடு, சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தம், நம்பிக்கையை மறுகட்டமைப்பதற்கான வாய்ப்பாக இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்தப் பதிவுக்குப் பதிலளித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், ‘ஐ.நா. அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியமாகிறது. அதிக அதிகாரம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பு நாடுகள், பிற நாடுகளுடன் அதிகாரத்தைப் பகிா்ந்துகொள்ள விரும்புவதில்லை. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றாக இடம்பெறாதது அபத்தமானது’ எனப் பதிவிட்டிருந்தாா்.

முன்னதாக, அமெரிக்காவைச் சோ்ந்த இஸ்ரேல் தொழிலதிபா் மைக்கேல் ஐசன்பொ்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இடம்பெறாதது குறித்து பதிவிட்டிருந்தாா்.

பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளாக அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் முக்கியத் தீா்மானங்களை ரத்து செய்வதற்கான வீட்டோ அதிகாரம் இந்த நாடுகளுக்கு உள்ளது. இந்த அமைப்பில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென இந்தியா நீண்ட காலமாகக் கோரிக்கைவிடுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com