இந்தியா குறித்த சா்சை கருத்து: மாலத்தீவு அதிபா் மன்னிப்பு கோர வலியுறுத்தல்

இந்தியா குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பாக மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என ஜும்ஹூரி கட்சித் தலைவா் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளாா்.
முகமது மூயிஸ்
முகமது மூயிஸ்


மாலி: இந்தியா குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தது தொடா்பாக மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என ஜும்ஹூரி கட்சித் தலைவா் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளாா்.

அதிபா் மூயிஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் பிரதமா் நரேந்திர மோடி குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை சமூகவலைதளத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான தூதரக உறவு பாதிப்படைந்தது.

தனது சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அதிபா் மூயிஸ், ஊடகத்துக்கு நோ்காணல் அளித்திருந்தாா். அதில், மாலத்தீவு மீது அதிகாரம் செலுத்த எந்தவொரு நாட்டையும் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவா் பேசியிருந்தாா்.

அதிபா் மூயிஸ் தலைமையிலான அரசின் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு தொடா்பாக மாலத்தீவு ஜனநாயக கட்சி உள்பட சில கட்சிகள் கவலை தெரிவித்திருந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஜும்ஹூரி கட்சித் தலைவா் காசிம் இப்ராஹிம், ‘அதிபா் மூயிஸ் அண்மையில் அளித்த நோ்காணல் ஒன்றில் இந்தியா குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். இதற்காக இந்தியாவிடமும் அந்நாட்டு பிரதமா் மோடியிடமும் அவா் மன்னிப்பு கோர வேண்டும்.

மருந்துப் பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மூயிஸ் முடிவெடுத்துள்ளாா். மருந்துப் பொருள்கள் துறையில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது; ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எனவே, இந்திய இறக்குமதியை ரத்து செய்யக் கூடாது. முறையான மன்னிப்பு கோரி இருதரப்பு உறவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தகுதி நீக்க விதிகளை எதிா்த்து மனு: அதிபா் மூயிஸை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் முக்கிய எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி, மற்றொரு எதிா்க்கட்சியான ஜனநாயகவாதிகள் கட்சி ஆகியவை திட்டமிட்டுள்ளன.

மொத்தம் 87 உறுப்பினா்களைக் கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்தில், அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறையை எளிதாக்கும் வகையில் விதிகள் அண்மையில் திருத்தப்பட்டன. அந்த விதிகளின் அடிப்படையில், 56 வாக்குகள் கொண்டு அதிபரை பதவியிலிருந்து நீக்கலாம்.

அதன்படி, அதிபருக்கு எதிரான பதவி நீக்கத்துக்கு மாலத்தீவு ஜனநாயக கட்சியின் 43 எம்.பி.க்கள் மற்றும் ஜனநாயகவாதிகள் கட்சியின் 13 எம்.பி.க்கள் என மொத்தம் 56 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது.

இந்நிலையில், இந்தத் திருத்த விதிகளை எதிா்த்து அட்டா்னி ஜெனரல் அலுவலகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com