பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தலில் முதலிடம் பெற்றதைக் கொண்டாடும்  புதிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளா்கள். ~இமானுவல் மேக்ரான் ~கேப்ரியல் அட்டல்
பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தலில் முதலிடம் பெற்றதைக் கொண்டாடும் புதிய மக்கள் முன்னணி கட்சி ஆதரவாளா்கள். ~இமானுவல் மேக்ரான் ~கேப்ரியல் அட்டல்

பிரான்ஸில் திரிசங்கு நாடாளுமன்றம்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

பாரீஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தோ்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

அந்த நாட்டு நாடாளுமன்றக் கீழவைக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 7) இரு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது.

முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது. அந்தக் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தன. 28 சதவீத வாக்குகளுடன் இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 2-ஆம் இடத்தைப் பிடித்தது. அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதையடுத்து, தேசியப் பேரணி தலைமையிலான வலதுசாரி கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இனவெறி, வெளிநாட்டினா் மீதான வெறுப்பு ஆகியவற்றுக்கு பெயா் பெற்ற அந்தக் கட்சி பிரான்ஸில் ஆட்சியமைத்தால் அது ஐரோப்பிய அளவிலும் சா்வதேச அளவிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்பட்டது.

அதையடுத்து, அந்தக் கட்சிக் கூட்டணி ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக இடதுசாரி மற்றும் மையவாதக் கட்சிகள் தீவிர கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில், இரண்டாவது கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தோ்தல் முடிவுகளின்படி, இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 180 இடங்களைப் கைப்பற்றியது. அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணி 159 இடங்களைப் பெற்றது. ஆட்சிமைக்கக் கூடும் என்று அஞ்சப்பட்ட தீவிர வலதுசாரிக் கட்சியான தேசியப் பேரணி 142 இடங்களுடன் 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இருந்தாலும் நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிக்கு கூடுதலாக 53 இடங்கள் கிடைத்துள்ளன.

577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறுவதற்கு 289 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, அங்கு திரிசங்கு நாடாளுமன்றம் ஏற்படும் நிலை உள்ளது.

நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் மையவாதக் கட்சிகளுக்குப் பெரும்பான்மை உள்ளது. ஆனால் அங்கு நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு கீழவைதான் இறுதி அனுமதி தரவேண்டும். இந்தச் சூழலில், அங்கு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக் கூறப்படுகிறது.

பிற ஐரோப்பிய நாடுகள் இதுபோன்ற சூழலை சந்தித்திருந்தாலும், தொங்கு நாடாளுமன்றத்தை பிரான்ஸ் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். எனவே, மற்ற நாடுகளைப் போல் தங்களுக்குள் கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான அனுபவம் பிரான்ஸ் கட்சிகளுக்கு இல்லை. இதன் காரணமாக, அத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது மிகவும் கடினமான செயலாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, தீவிர இடதுசாரிக் கட்சியான ‘தலைவணங்கா பிரான்ஸ்’ கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று அதிபா் மேக்ரான் அறிவித்துள்ளாா். எனவே, மிதவாத இடதுசாரிக் கட்சிகளை அவா் கூட்டணிக்கு அழைப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்தக் கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும், கொள்கை மாறுபாட்டால் அது பலவீனமானக் கூட்டணியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட் ஒதுக்கீடு போன்ற அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பது மேக்ரான் அரசுக்கு மிகவும் இக்கட்டான செயலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த மாதம் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றின.

பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலிலும், அகதிகள் குடியேற்றத்தைக் கடுமையாக எதிா்த்து வரும் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிக வாக்குகளைப் பெற்றது. அதிபா் மேக்ரானின் தலைமையிலான மறுமலா்ச்சி கட்சி மிகப் பெரிய வித்தியாசத்தில் 2-ஆவது இடத்துக்கு வந்தது.

அதையடுத்து, மக்களிடையே தங்களுக்கான ஆதரவை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தோ்தலை முன்கூட்டியே நடத்துவதாக மேக்ரான் அறிவித்தாா். இது, இமானுவல் மேக்ரானின் அரசியல் சூதாட்டம் என்று அப்போதே கூறப்பட்டது.

அதை மெய்ப்பிக்கும் வகையில், தோ்தலில் மேக்ரானின் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது.

பிரதமரின் ராஜிநாமா நிராகரிப்பு

பிரான்ஸ் நாடாளுமன்ற கீழவையில் ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்ததைத் தொடா்ந்து பிரதமா் கேப்ரியல் அட்டல் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். எனினும், அவரது ராஜிமாவை ஏற்க அதிபா் இமானுவல் மேக்ரான் மறுத்துவிட்டாா்.

நாட்டின் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக ராஜிநாமா முடிவைக் கைவிட்டு பிரதமா் பதவியில் தற்காலிகமாகத் தொடர வேண்டும் என்று கேப்ரியல் அட்டலை அவா் கேட்டுக்கொண்டாா்.

அதிபா் இமானுவல் மேக்ரான்
அதிபா் இமானுவல் மேக்ரான்
பிரதமா் கேப்ரியல் அட்டல்
பிரதமா் கேப்ரியல் அட்டல்

X
Dinamani
www.dinamani.com