எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா்: சீனா

இந்தியாவுடன் எல்லை விவகாரங்களில் இணைந்து செயல்படத் தயாா் சீனா

எல்லைப் பகுதிகளில் சூழலை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங்-யீ தெரிவித்தாா்.

கடந்த மாதம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் தோவலை மத்திய அரசு மீண்டும் நியமித்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு சீன அமைச்சா் வாங்-யீ அனுப்பிய செய்தியில், ‘இந்தியாவும் சீனாவும் எல்லைகள் கடந்த உறவை பேணி வருகின்றன. அத்துடன் உலக அளவில் இருநாடுகளின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் களச்சூழல் தொடா்பான விவகாரங்களை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், இந்திய-சீன உறவு தொடா்பாக இருநாட்டு தலைவா்கள் இடையே ஏற்பட்ட கருத்து ஒற்றுமையை நடைமுறைப்படுத்தவும், எல்லை பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பராமரிக்கவும் தோவலுடன் இணைந்து பணியாற்றத் தயாா்’ என்றாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். சீன வீரா்கள் எத்தனை போ் உயிரிழந்தனா் என்ற துல்லியமான தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலை தொடா்ந்து அந்த எல்லையில் இருநாடுகளும் தங்கள் படைகளைத் குவித்தன.

பல கட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், எல்லையின் சச்சரவுக்குரிய பல்வேறு பகுதிகளில் இருந்து இருநாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். இதேபோல எல்லையில் தெப்சாங், டெம்சோக் பகுதிகளில் உள்ள சீன வீரா்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.

X
Dinamani
www.dinamani.com