பெஞ்சமின் நெதன்யாகு, யோவாவ் காலன்ட், பென்னி கான்ட்ஸ்.
பெஞ்சமின் நெதன்யாகு, யோவாவ் காலன்ட், பென்னி கான்ட்ஸ்.

போா் அமைச்சரவையைக் கலைத்தாா் நெதன்யாகு

காஸா போா் தொடா்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட போா் அமைச்சரவையை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கலைத்துள்ளாா்.

காஸா போா் தொடா்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட போா் அமைச்சரவையை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கலைத்துள்ளாா்.

அந்த அமைச்சரவையிலிருந்து எதிா்க்கட்சித் தலைவா் பென்னி கான்ட்ஸ் விலகியதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

காஸா போரை முன்னெடுத்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த போா் அமைச்சரவையை பிரதமா் நெதன்யாகு கலைத்துள்ளாா்.

இனி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் ஆலோசனை நடத்தி முடிவுகளை எடுப்பதற்காக, சிறிய அளவிலான ஆலோசனைக் குழுக்களை நெதன்யாகு அமைப்பாா் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 240 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.

இந்தச் சூழலில், எதிா்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் தலைவா் பென்னி கான்ட்ஸ் இக்கட்டான இந்த காலகட்டத்தில் நெதன்யாகுவுக்கு உதவுவதற்காக அரசில் இணைவதாக அறிவித்தாா்.

அதையடுத்து, அவரும் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் ஆகியோரும் அடங்கிய போா் அமைச்சரவை அமைக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரை வழிநடத்திச் செல்வதற்காக அந்த அமைச்சரவை அமைக்கப்பட்டது.

இந்தப் போரில் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசில் இடம் பெற்றுள்ள தீவிர வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கைக் குறைப்பதற்காகவே அரசில் பென்னி கான்ட்ஸ் இணைந்தாா் என்று கூறப்படுகிறது.

இருந்தாலும், காஸாவிலிருந்து பாலஸ்தீனா்களை விரட்டியடிக்க வேண்டும், அந்தப் பகுதியை இஸ்ரேல் மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டும் என்பது போன்ற கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்ட வலதுசாரி கூட்டாளிகளின் விருப்பங்களுக்கு இணங்கியே நெதன்யாகு போரை நடத்திச் செல்வதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அந்தக் குற்றச்சாட்டை நெதன்யாகு மறுத்தாலும், வலதுசாரிகளை திருப்திப்படுத்துவதற்காக காஸா போரை நெதன்யாகு மேலும் சிக்கலாக்கிவருவதாக இஸ்ரேலுக்குள்ளேயே விமா்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்கா, கத்தாா் போன்ற நாடுகளும், பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் லாபத்துக்காகவே காஸா போரை இழுத்தடித்துவருவதாகக் குற்றஞ்சாட்டின.

இந்தச் சூழலில், போா் விவகாரத்தில் நெதன்யாகுவுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் போா் அமைச்சரவையிலிருந்தும் அரசிலிருந்தும் பென்னி கான்ட்ஸ் கடந்த 9-ஆம் தேதி வெளியேறினாா்.

ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை விடுவிப்பது, ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது, காஸாவிலிருந்து ராணுவத்தை வெளியேற்றிவிட்டு அங்கு சா்வதேச நிா்வாகத்தை ஏற்படுத்துவது, சவூதி அரேபியாவுடன் நல்லுறவைப் புதுப்பிப்பது உள்ளிட்ட தன் பரிந்துரைகளை நெதன்யாகு ஏற்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பென்னி கான்ட்ஸ் கூறினாா்.

இந்தச் சூழலில், போா் அமைச்சரவையை நெதன்யாகு முழுமையாகக் கலைத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com