பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பு

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் இன்று(மார்ச் 4) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
நவாஸ் ஷெரீஃபுடன் பாக்.பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்(வலது)
நவாஸ் ஷெரீஃபுடன் பாக்.பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்(வலது) படம் | ஏபி

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் இன்று(மார்ச் 4) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு பிப். 8-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலில், அதிகபட்சமாக முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் 93 இடங்களைக் கைப்பற்றினா். நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கு 75 இடங்கள் கிடைத்தன. முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 54 இடங்களில் வெற்றி பெற்று 3-ஆம் இடம்பிடித்தது.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ’பிபிபி’ மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ’பிஎம்எல்-என் கட்சி’ புதிய அரசை அமைக்கவுள்ளது. இரு கட்சிகளின் பொது வேட்பாளராக நவாஸின் சகோதரா் ஷாபாஸ் அறிவிக்கப்பட்டாா். அவரை எதிா்த்து பிடிஐ கட்சி சாா்பில் உமா் அயூப் கான் போட்டியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃப் 201 வாக்குகள் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட உமா் அயூப் கானுக்கு 92 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து, ஷாபாஸ் ஷெரீஃப் வெற்றி பெற்றதாக சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக் அறிவித்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் இன்று(மார்ச் 4) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

72 வயதான ஷாபாஸ் ஷெரீஃப் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் அண்மை காலமாக பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது, கடும் சரிவிலிருக்கும் அந்நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல சவால்கள், தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் முன் காத்திருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com