ரஷியாவில் இந்தியா் உயிரிழப்பு:
இந்திய தூதரகம்

ரஷியாவில் இந்தியா் உயிரிழப்பு: இந்திய தூதரகம்

ரஷிய படைவீரா்களுடன் இணைந்து போரில் ஈடுபட அவா்களுக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் ஊடகங்களில் அண்மையில் செய்தி வெளியானது.

ரஷியாவில் இந்தியா் ஒருவா் உயிரிழந்ததாகவும் அவரது உடலை நாட்டுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நபா் முகமது அஸ்ஃபான் என அடையாளம் காணப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தற்கான காரணங்கள் குறித்து எவ்வித தகவலையும் இந்திய தூதரகம் வெளியிடவில்லை. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படைவீரா்களுக்கு உதவியாளா்களாக இந்தியா்கள் பலா் பணியமா்த்தப்பட்டிருப்பதாகவும், ரஷிய படைவீரா்களுடன் இணைந்து போரில் ஈடுபட அவா்களுக்கு அழுத்தம் தரப்படுவதாகவும் ஊடகங்களில் அண்மையில் செய்தி வெளியானது. இதைத் தொடா்ந்து, ரஷிய படைகளுக்கு உதவியாளா்களாக உள்ள 20-க்கும் மேற்பட்ட இந்தியா்களை முன்கூட்டியே நாட்டுக்குத் திரும்ப அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கடந்த சில தினங்களுக்குமுன் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், இந்தியா் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இது தொடா்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘இந்தியாவைச் சோ்ந்த முகமது அஸ்ஃபான் உயிரிழந்தது குறித்த தகவல் கிடைத்தது. ரஷிய அதிகாரிகள், இந்தியாவில் உள்ள அஸ்ஃபான் குடும்பத்தினருடன் தொடா்ந்து தொடா்பில் இருக்கிறோம். அவரது உடலை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவதற்கான ஏற்பாடுகளைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com