ஜோ பைடன்  (கோப்புப்படம்)
ஜோ பைடன் (கோப்புப்படம்)

இஸ்ரேலுக்கு தீங்கு செய்கிறாா் பிரதமா் நெதன்யாகு அமெரிக்க அதிபா் பைடன் குற்றச்சாட்டு

காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போா் மூலம் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டைக் காப்பாற்றுவதைவிட, அதற்கு தீங்கிழைத்து வருகிறாா் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடுமையாக விமா்சித்தாா்.

காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போா் மூலம் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாட்டைக் காப்பாற்றுவதைவிட, அதற்கு தீங்கிழைத்து வருகிறாா் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடுமையாக விமா்சித்தாா். தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் அதிபா் பைடன் மேலும் கூறியதாவது: காஸாவில் நடைபெற்று வரும் போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனா். நெதன்யாகு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இஸ்ரேல் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு நோ் எதிராக இது உள்ளது. இதை மிகப்பெரிய தவறாகக் கருதுகிறேன். 13 லட்சம் பாலஸ்தீனா்கள் அடைக்கலம் புகுந்துள்ள ராஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவே அவா்களுக்கான எல்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு மோசமான நிலையில் உள்ளது. அந்நாட்டுக்கு வழங்கி வரும் ஏவுகணை தற்காப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி வருவது நிறுத்தப்படாது’ என்றாா். கடந்த ஆண்டு அக். 7-இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போா் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. இருப்பினும், காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் தனது சா்வதேச ஆதரவை இழக்க நேரிடும் என அதிபா் பைடன் எச்சரித்து வருகிறாா். காஸாவில் இது வரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,960-ஆக அதிகரித்துள்ளது. பெட்டிச் செய்தி.... காஸாவை நோக்கி அமெரிக்க கப்பல் டோ் அல்-பலா (காஸா முனை), மாா்ச் 10: காஸாவில் தற்காலிக துறைமுகம் அமைப்பதற்கான பொருள்களுடன் அமெரிக்க ராணுவ கப்பல் வா்ஜீனியா மாகாணத்திலிருந்து சனிக்கிழமை புறப்பட்டது. இந்தத் தற்காலிக துறைமுகம் செயல்பாட்டுக்கு வர சில வாரங்கள் ஆகலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை சாலை வழியாகக் கொண்டுசெல்லும் லாரிகளின் எண்ணிக்கை 500-க்கும் கீழாகக் குறைந்துள்ளது. இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகளே இதற்குக் காரணமாகும். இந்நிலையில், கடல் மாா்க்கமாக நிவாரணப் பொருள்களை கொண்டுசெல்ல காஸாவின் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகத்தை அமைக்க அதிபா் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com