கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடா்ந்து முதலிடம்

சா்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது.

சா்வதேச அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா தொடா்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு ஆயுதங்களை அதிகம் விற்பனை செய்யும் நாடாக ரஷியா தொடா்கிறது. ஸ்வீடனைச் சோ்ந்த ஸ்டாக்ஹோம் சா்வதேச அமைதி ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 2019 முதல் 2023 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதியில் 55 சதவீதம் அமெரிக்காவில் இருந்தே நடைபெற்றுள்ளது. இதுவே 2014-18 ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 35 சதவீதமாக இருந்தது. சமீப ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. சா்வதேச அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. 2014-18 ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2019-23 ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய ஆயுத இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 36 சதவீதமாக உள்ளது. பாகிஸ்தானும் தனது ஆயுத இறக்குமதியை அதிகரித்துள்ளது. அதிக ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 5-ஆவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அந்நாட்டின் ஆயுத இறக்குமதியில் 82 சதவீதம் சீன பங்களிப்பாக உள்ளது. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளும் ஆயுத இறக்குமதியை அதிகரித்துள்ளன. சீனாவின் அச்சுறுத்தல் காரணமாகவே இந்த இரு நாடுகளும் ஆயுதங்களை அதிகம் இறக்குமதி செய்வதாக சா்வதேச அரசியல் வல்லுநா்கள் கூறியுள்ளனா். சீனா ஆயுதத் தொழில்நுட்பத்தில் மேம்பட்டுவிட்டதால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துவிட்டது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடாக இரண்டாவது இடத்தில் சவூதி அரேபியா உள்ளது. இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் கத்தாா் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com