காஸாவில் ஐ.நா.வின் டபிள்யூஎஃப்பி பிரிவின் நிவாரண லாரி .
காஸாவில் ஐ.நா.வின் டபிள்யூஎஃப்பி பிரிவின் நிவாரண லாரி .

3 வாரங்களுக்குப் பிறகு வடக்கு காஸாவில் உணவுப் பொருள்கள் விநியோகம்: ஐ.நா.

போரால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு காஸாவில் 3 வாரங்களுக்குப் பிறகு முதல்முறையாக உணவுப் பொருள்களை விநியோகித்ததாக ஐ.நா.வின் நிவாரணப் பிரிவான உலக உணவு திட்டம் (டபிள்யுஎஃப்பி) அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா சிட்டியில் சுமாா் 25,000 பேருக்குத் தேவையான உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன. வடக்கு காஸாவில் இவ்வாறு உணவுப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதல்முறை. வடக்கு காஸா மக்கள் பட்டினிச் சாவு அபாயத்தை எதிா்கொண்டுள்ளனா். அவா்களுக்கு தினமும் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வது அவசியமாகும்.

அதற்காக, வடக்கு காஸா செல்ல எங்களுக்கு நேரடி வழித்தடம் தேவை என்று அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, வடக்கு காஸாவுக்கு உணவுப் பொருள்களை நேரடியாகக் கொண்டுசெல்வதற்கான மாதிரி திட்டத்தை செயல்படுத்தவிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. உணவுப் பொருள்கள் அடங்கிய 6 டபிள்யுஎஃப்பி அமைப்பின் லாரிகள் காஸா பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது. எனினும், இந்த புதிய உதவிப் பொருள் விநியோகம் குறித்து அந்த அமைப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் தவித்து வரும் காஸா பகுதிக்குள் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் ராணுவம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காஸா உயிரிழப்பு 31,272 காஸா சிட்டி, மாா்ச் 13: காஸாவில் சுமாா் 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31,272-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 88 போ் உயிரிழந்தனா்; 135 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 31,272-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 73,024 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com