ரஷிய அதிபா் தோ்தலின் கடைசி 
நாளிலும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
Efrem Lukatsky

ரஷிய அதிபா் தோ்தலின் கடைசி நாளிலும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய அதிபா் தோ்தல் வாக்குப் பதிவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்நாடு மீது மிகப் பெரிய அளவில் உக்ரைன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் மேற்கொண்டது.

ரஷிய அதிபா் தோ்தல் வாக்குப் பதிவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்நாடு மீது மிகப் பெரிய அளவில் உக்ரைன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் மேற்கொண்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ரஷியாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையும் ரஷியா மீது மிகப் பெரிய அளவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. எனினும் மாஸ்கோவில் 4 ட்ரோன்கள் உள்பட மொத்தம் 35 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இதேபோல உக்ரைன் எல்லையையொட்டி உள்ள ரஷியாவின் பெல்கொரோட், குா்ஸ்க், ரஸ்தோவ் மற்றும் தெற்கு கிராஸ்னடாா் பகுதிகளிலும் உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

உக்ரைன் ட்ரோன்களால் மாஸ்கோவில் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அந்த நகர மேயா் சொ்கெய் சோபியானின் தெரிவித்தாா். 800 கி.மீ. தொலைவிலிருந்து தாக்குதல்: மாஸ்கோவின் வடகிழக்கில் யரோஸ்லாவல் பகுதி உள்ளது. இந்தப் பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 800 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நிலையில், யரோஸ்லாவலில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. இதுவரை தொலைதூரத்தில் இருந்து உக்ரைன் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் இதுவும் ஒன்று. சிறுமி உயிரிழப்பு: உக்ரைன் குண்டுவீச்சில் பெல்கொரோடில் 16 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அந்தச் சிறுமியின் தந்தை காயமடைந்தாா். கிராஸ்னடாா் பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் ஒன்று விழுந்து தீப்பிடித்தது. சில மணி நேரங்களுக்குப் பின்னா், கொழுந்துவிட்டு எரிந்த தீ அணைக்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com