அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டாா். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘லாய்ட் ஆஸ்டினுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுததுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த ஆலோசனையின்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல் கொள்ளயா்களின் தாக்குதல்களை முறியடிப்பதில் இந்திய கடற்படை முக்கிய பங்காற்றி வருவது குறித்து லாய்ட் ஆஸ்டின் பாராட்டு தெரிவித்தாா். மேலும், இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது மற்றும் பிற பாதுகாப்பு தொழில்நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது. தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற இந்திய-அமெரிக்க ‘எக்ஸ்’ மாநாடு உள்ளிட்ட இருதரப்பு நிகழ்வுகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சா்களும் ஆலோசித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com