அயர்லாந்து பிரதமர் வராத்கர் திடீர் ராஜிநாமா

அயர்லாந்து பிரதமர் வராத்கர் திடீர் ராஜிநாமா

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வராத்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் எதிர்பாராத நேரத்தில் அறிவித்துள்ளது நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து லியோ வராத்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இந்த இடத்துக்கு என்னைவிட தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவார்.

எனது இந்த ராஜிநாமா முடிவுக்கு தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. அதில் அரசியல் காரணங்கள்தான் அதிகம்.

பல ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்துவிட்டேன். இதற்கு மேலும் இந்தப் பொறுப்புக்கு பொருத்தமான நபராக என்னை நான் கருதவில்லை.

எனக்கு நெருக்கமானவர்களும், விசுவாசமானவர்களும் உள்ளூர் மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடவுள்ளனர். அவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை அளிக்கவே நான் பதவி விலகுகிறேன்.

தனிப்பட்ட முறையில், அயர்லாந்தின் பிரதமராக இருந்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இருந்தாலும், அரசியல்வாதிகளும் மனிதர்கள்தான். அவர்களது திறனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு மேல் பதவியை விட்டுக்கொடுத்து நகரவேண்டும்.

தற்போதைய நிலையில் எனது எதிர்காலம் குறித்து எந்த திட்டமும் இல்லை. இது குறித்து பிறகு சிந்திப்பேன் என்றார் அவர்.

45 வயதாகும் லியோ வராத்கர் மும்பையிலிருந்து வந்த தந்தைக்கும், அயர்லாந்து தாய்க்கும் பிறந்தவர். அவரது தலைமையிலான

"ஃபைன் கேயல்' கட்சி அயர்லாந்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்தி வருகிறது.

அயர்லாந்து பிரதமராக 2017 முதல் பொறுப்பு வகித்த வராத்கர், 2020-இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மைக்கேல் மார்ட்டினின் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். அதற்காக மார்ட்டினும், வராத்கரும் சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வகிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 2020-லிருந்து 2 ஆண்டுகளுக்கு நாட்டின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் இருந்தார். பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தின் கீழ் அவர் 2022-ஆம் ஆண்டு பதவி விலகியதையடுத்து லியோ வராத்கர் மீண்டும் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

ஆனால், அவரது ஆட்சியில் அயர்லாந்து அரசியல் சாசனத்தில் "குடும்பம்' என்ற வார்த்தையை திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுக்கும் விரிவுபடுத்துவது, "பெண்களின் கடமைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆணாதிக்க அம்சங்களை நீக்குவது ஆகிய இரு விவகாரங்களில் பொதுமக்களின் அனுமதியை கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த இரு வாக்கெடுப்புகளிலும் அரசியல் சாசனத்தின் சீர்திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இந்தச் சூழலில், தனது ராஜிநாமா முடிவை திடீரென அறிவித்து லியோ வராத்கர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com