இந்தோனேசிய கடலில் மிதந்த ரோஹிங்கியா அகதிகள் உடல்கள் மீட்பு!

இந்தோனேசிய கடலில் மிதந்த ரோஹிங்கியா சமூக இளம்பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கவிழ்ந்த படகில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்
கவிழ்ந்த படகில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்படம் | ஏபி

வங்கதேசத்திலிருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, இந்தோனேசிய கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படகில் பயணித்த 70 ரோஹிங்கியா அகதிகள் மாயமானதாக கடந்த வெள்ளியன்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் ஏஸ் மாகாண கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் பயணித்த பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 44 ஆண்கள், 22 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட மொத்தம் 75 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள்
இந்தோனேசியாவில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள்படம் | ஏபி

இந்நிலையில், படகில் பயணித்த 3 ரோஹிங்கியா அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் ஏஸ் மாகாண கடற்பகுதியில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர், கடலில் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்த தகவலை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடலில் மிதந்த 2 இளம்பெண்களின் சடலங்களும் ஒரு சிறுவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் விபத்துக்குள்ளான படகில் பயணித்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சிறுபான்மையினச் சமூகமாக வாழ்ந்து வந்த ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதுடன், அச்சமூக பெண்கள் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாகவும், அவர்களின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்படதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மியான்மரில் உள்ள ரோஹிங்கியா சிறுபான்மையினர் அண்டை நாடுகளில் அவர்கள் புகலிடம் தேடிச் சென்றுள்ளனர்.

அந்த வகையில், மியான்மர் நாட்டை சேர்ந்த சுமார் 1 மில்லியன் ரோஹிங்கியா இஸ்லாமிய சமூக மக்கள், வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அங்கிருந்து கடல் வழியாக பிற பகுதிகளுக்கு அகதிகள் வெளியேறி வரும் நிலையில், ரோஹிங்கியா அகதிகள் குழு சென்ற படகு இந்தோனேசியா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com