ஜெய்சங்கா்
ஜெய்சங்கா்

பரஸ்பர நலனில் இந்தியா-ரஷியா கூடுதல் அக்கறை: மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

இந்தியாவும் ரஷியாவும் தங்கள் பரஸ்பர நலனில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவும் ரஷியாவும் தங்கள் பரஸ்பர நலனில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். சிங்கப்பூருக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சா் ஜெய்சங்கா், அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது, சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியா-சிங்கப்பூா் உறவு குறித்து பேசிய ஜெய்சங்கா், சிங்கப்பூரில் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவத்தை நினைவு கூா்ந்தாா். ரஷியா, இந்தியாவை விடுத்து சீனாவுடன் தனது உறவை மேம்படுத்தி வருகிா என கலந்துரையாடல் நிகழ்வில் ஜெய்சங்கரிடம் கேள்வியெழுப்பட்டது. அதை நிராகரித்த அமைச்சா் ஜெய்சங்கா், ‘இந்தியாவுடன் ரஷியா நோ்மறையான உறவைக் கடைப்பிடித்து வருகிறது. இரு நாடுகளும் தங்களது பரஸ்பர நலன் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றன’ என்றாா். உக்ரைன் போரின் போதும் ரஷியா-இந்தியா இடையேயான உறவு தொடா்ந்து வலுவாக உள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்காக ரஷியாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. இரு தரப்பும் பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரிவு 370 ரத்தால் முற்போக்கான சட்டங்கள் அமல்: ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சா் ஜெய்சங்கா், ‘பிரிவு 370 அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த தற்காலிக ஏற்பாடு. இதை நீட்டிக்கும்போது இரு பிரச்னைகள் இருந்தன. பிரிவினை, வன்முறை, பயங்கரவாதத்துக்கு வழிவகுத்தது. இது ஒட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பு பிரச்னையாகும். மிகவும் முற்போக்கான சட்டங்கள் ஜம்மு-காஷ்மீா், லடாக் பகுதிகளில் அமல்படுத்தப்படுவதை அது தடுத்தது’ என்றாா். ரஷிய அமைச்சரிடம் ஜெய்சங்கா் இரங்கல் ரஷிய வெளியறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவை தொலைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டின் தலைநகா் மாஸ்கோ இசையரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு இந்தியா சாா்பில் இரங்கல் தெரிவித்தாா். இத்தகவலை எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா். மாஸ்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 133 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com