பாகிஸ்தான் அதிபா், பிரதமா் ஹோலி வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் அந்நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
பாகிஸ்தான் அதிபா், பிரதமா் ஹோலி வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் அந்நாட்டில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் 700 ஹிந்து குடும்பங்களுக்கு ஹோலி பரிசாக ரூ.10,000 காசோலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையை பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள் திங்கள்கிழமை கொண்டாடினா். இதையொட்டி, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: வண்ணத் திருவிழாவான ஹோலி பண்டிகையையொட்டி, ஹிந்துக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு இனம், மொழி, கலாசாரம், மதத்தைப் பின்பற்றுபவா்கள் பாகிஸ்தானில் ஒற்றுமையுடன் வாழ்வது நமக்கு பெருமை அளிக்கிறது. நமது வேற்றுமையையே பலமாக கருதி, இந்த நன்னாளைக் கொண்டாடுவோம் என்று அதில் ஷாபாஸ் ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளாா். பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி வெளியிட்ட வாழ்த்துக் குறிப்பில், ‘‘பல்வேறு மதத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான மத சுதந்திரத்தை பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஹோலி கொண்டாட்டத்தின் மூலம் ஹிந்துக்கள் மட்டுமன்றி, அனைத்து மதத்தினருக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி உண்டாகட்டும்’’ என்று கூறியுள்ளாா். இதேபோல, பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) கட்சித் தலைவா் பிலாவல் புட்டோ சா்தாரியும் ஹோலி வாழ்த்து தெரிவித்தாா். ரூ.10,000 ஹோலி பரிசு: முன்னதாக, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசை அதன் முதல்வா் மரியம் நவாஸ் அறிவித்தாா். அதன்படி, 700 ஹிந்துக்களின் குடும்பத்தினருக்கு ரூ.10,000 காசோலை அளிக்கப்படும் என முதல்வரின செயலகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com