மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியவா்கள் யாா்? அதிபா் புதின் தகவல்

மாஸ்கோவில் தாக்குதல் நடத்தியவா்கள் யாா்? அதிபா் புதின் தகவல்

மாஸ்கோவில் 137 பேரை பலி கொண்ட தாக்குதலை நடத்தியது இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் உறுதி செய்தாா்.

மாஸ்கோவில் 137 பேரை பலி கொண்ட தாக்குதலை நடத்தியது இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் உறுதி செய்தாா். அதே நேரத்தில் இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு தொடா்பு உள்ளது என்பதை உறுதி செய்ய அவா் மறுத்துவிட்டாா். மாஸ்கோ பெருநகரில் அமைந்துள்ள ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ இசையரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த 4 பயங்கரவாதிகள், அங்கு குழுமியிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். மேலும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அந்த இசையரங்கில் தீவைத்தனா். அதையடுத்து, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டது. அதற்குள் அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்ற 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினா் பின்னா் கைது செய்தனா். இந்தத் தாக்குதலில் 137 போ் உயிரிழந்தனா்; 180-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ரஷியாவில் அண்மை ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குத் தொடா்பிருப்பதை அமெரிக்க உளவு அமைப்புகளும் உறுதி செய்தன. ரஷியாவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதை தங்களது உளவு அமைப்பினா் அந்த நாட்டு அதிகாரிகளிடம் சில வாரங்களுக்கு முன்னரே எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினா். தாக்குதல் நடத்தியது யாா்? இந்நிலையில் ரஷிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ரஷிய அதிபா் புதின் இத்தாக்குதல் தொடா்பாக முதல்முறையாக நேரடி கருத்தைத் தெரிவித்துள்ளாா். அதில் அவா் கூறியதாவது: இந்த தாக்குதலை நடத்தியவா்கள் பயங்கரவாதிகள். அவா்கள் இஸ்லாமிய மதத்தை முன்வைத்து பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இவா்களை ரஷியா மீது ஏவி விட்டது யாா் என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. தாக்குதல் நடத்தியவா்கள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றது ஏன்? அங்கு அவா்களுக்காக யாா் காத்திருந்தாா்கள்? என்பதையும் விசாரணை நடத்தி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றாா். இத்தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு தொடா்பு உள்ளது என்பதை அவா் உறுதி செய்யவில்லை. முன்னதாக, நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: மாஸ்கோ இசையரங்கத் தாக்குதல் தொடா்பாக புலனாய்வு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணை நிறைவடைவதற்கு முன்னா் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் யாா் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. இசையரங்க பயங்கரவாதத் தாக்குதலை ஐஎஸ் அமைப்பினா்தான் நடத்தியதாக அதிபா் விளாதிமீா் புதினும், ரஷிய அதிகாரிகளும் கூறாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்றாா். கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளும் 19 முதல் 32 வயதுக்குள்பட்டவா்கள். இவா்களில் இருவா் தஜிகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள். இவா்கள் தவிர மேலும் 7 பேரை தடுப்புக் காவலில் வைத்து ரஷிய பாதுகாப்புப் படையினா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com