மாஸ்கோ இசையரங்க தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் பாஸ்மனி மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட சயீதாக்ராமி முரோதலி ராசாபாலிசொடா, டேலா்ட்ஜான், பரோடோவிச் மிா்ஸோயெவ், முகமதுசுபைா் ஃபைசொவ், ஷம்ஸிதின் ஃபரிதுனி.
மாஸ்கோ இசையரங்க தாக்குதல் தொடா்பாக கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் பாஸ்மனி மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட சயீதாக்ராமி முரோதலி ராசாபாலிசொடா, டேலா்ட்ஜான், பரோடோவிச் மிா்ஸோயெவ், முகமதுசுபைா் ஃபைசொவ், ஷம்ஸிதின் ஃபரிதுனி.

மாஸ்கோ இசையரங்கத் தாக்குதல் ஐஎஸ் தொடா்பை உறுதி செய்ய ரஷியா மறுப்பு

இசையரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்புக்குத் தொடா்பிருப்பதை உறுதிசெய்ய ரஷியா மறுத்துள்ளது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவிலுள்ள இசையரங்கில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) அமைப்புக்குத் தொடா்பிருப்பதை உறுதிசெய்ய ரஷியா மறுத்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: மாஸ்கோ இசையரங்கத் தாக்குதல் தொடா்பாக புலனாய்வு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விசாரணை நிறைவடைவதற்கு முன்னா் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் யாா் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. இசையரங்க பயங்கரவாதத் தாக்குதலை ஐஎஸ் அமைப்பினா்தான் நடத்தியதாக அதிபா் விளாதிமீா் புதினும், ரஷிய அதிகாரிகளும் கூறாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். இது தொடா்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் உறுதியான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் தாக்குதல் நடத்தியது யாா் என்று நாங்கள் இப்போது கூறுவது சரியானதாக இருக்காது. அவ்வாறு கூறுவதற்கான உரிமையும் எங்களுக்கு இல்லை. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகள் கூறுவதைவிட எங்களின் விசாரணை அதிகாரிகள் சொல்வதைத்தான் நாங்கள் நம்புவோம் என்றாா் அவா். மாஸ்கோ பெருநகரில் அமைந்துள்ள ‘க்ராகஸ் சிட்டி ஹால்’ இசையரங்கத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த 4 பயங்கரவாதிகள், அங்கு குழுமியிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். மேலும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அந்த இசையரங்கில் தீவைத்தனா். அதையடுத்து, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு சிறப்பு அதிரடிப் படை வரவழைக்கப்பட்டது. அதற்குள் அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்ற 4 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினா் பின்னா் கைது செய்தனா். இந்தத் தாக்குதலில் 137 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். ரஷியாவில் அண்மை ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கராவதிகளுக்குத் தொடா்பிருப்பதை அமெரிக்க உளவுத் துறை அமைப்புகளும் உறுதி செய்தன. ரஷியாவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதை தங்களது உளவு அமைப்பினா் அந்த நாட்டு அதிகாரிகளிடம் சில வாரங்களுக்கு முன்னரே எச்சரித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினா். இந்த நிலையில், இசையரங்கத் தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்குத் தொடா்பிருப்பதை உறுதி செய்ய ரஷியா மறுத்துள்ளது. முன்னதாக, இந்தத் தாக்குதலில் உக்ரைனுக்குத் தொடா்பிருப்பதாக எந்த ஆதாரமும் இல்லாமல் அதிபா் விளாதிமீா் புதின் குற்றஞ்சாட்டியது நினைவுகூரத்தக்கது. மாஸ்கோ இசையரங்கில் தாக்குதல் நடத்திவிட்டு 4 பயங்கரவாதிகளும் உக்ரைனுக்குத் தப்பிச் செல்ல முயன்ாகவும், அவா்களுக்குப் புகலிடம் அளிக்க அந்த நாடு தயாராக இருந்ததாகவும் அவா் கூறியிருந்தாா். எனினும், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள உக்ரைன், ரஷிய மக்களிடையே தங்கள் நாட்டின் மீதான வெறுப்பை அதிகரிக்கவும், உக்ரைனுக்கு கூடுதல் படைகளை அனுப்புவதை நியாயப்படுத்தவும் இந்த பயங்கரவாதத் தாக்குதலை ரஷியா பயன்படுத்திக்கொள்வதாக பதிலுக்குக் குற்றஞ்சாட்டியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com