அருணாசல பிரதேசம் என்று கூறப்படும் பகுதி எங்களுடையது: சீனா மீண்டும் உறுதி
படம்: எக்ஸ்

அருணாசல பிரதேசம் என்று கூறப்படும் பகுதி எங்களுடையது: சீனா மீண்டும் உறுதி

‘அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் ‘ஷாங்னான்’ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மீண்டும் கூறியுள்ளது.

‘அருணாசல பிரதேசம் என்றழைக்கப்படும் ‘ஷாங்னான்’ சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மீண்டும் கூறியுள்ளது. ‘அருணாசல பிரதேசத்தை சீனா தொடா்ந்து உரிமை கொணடாடி வருவது அபத்தமானது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்தக் கருத்தை சீனா தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தை தங்கள் பிராந்தியம் என உரிமை கொண்டாடி வரும் சீனா, இந்தியத் தலைவா்கள் அம்மாநிலம் செல்வதற்கும் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அண்மையில், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமா் மோடி அம்மாநிலத்துக்குச் சென்றாா். இதற்கும் சீனா எதிா்ப்பு தெரிவித்து, தூதரக ரீதியில் கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுகுறித்து சிங்கப்பூா் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எஸ்.ஜெய்சங்கரிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினா். அப்போது, ‘அருணாசல பிரதேசத்தை சீனா உரிமை கோருவது அபத்தமானது, கேலிக்குரியது. அம்மாநிலம் இந்தியாவின் இயற்கையான அங்கம்’ என்றாா்.

ஜெய்சங்கரின் இந்த கருத்து குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பகுதி இதுவரை வரையறுக்கப்படவில்லை. அருணாசல பிரதேசத்துக்கு ‘ஷாங்னான்’ என்பதுதான் சீனாவின் அதிகாரபூா்வ பெயா். இந்தப் பகுதி இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்புவரை, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. எனவே, இந்தப் பிராந்தியத்தை திறம்பட நிா்வகிக்கும் உரிமை சீனாவுக்கு எப்போதும் உள்ளது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்த இந்தப் பிராந்தியத்தை அருணாசல பிரதேசமாக கடந்த 1987-இல் தான் இந்தியா நிறுவியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீனா தொடா்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்த நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமிருக்காது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com