சீன அதிபா் ஷி ஜின்பிங் ஐரோப்பா பயணம்

சீன அதிபா் ஷி ஜின்பிங் ஐரோப்பா பயணம்

சீன அதிபா் ஷி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அமெரிக்க-சீனா இடையே அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில் ஷி ஜின்பிங் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

சீனாவில் மானியங்களுடன் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களால் ஐரோப்பாவில் வாகனத் தயாரிப்பாளா்கள் மின்னனு சந்தையில் பின்தங்கிய சூழலை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் சீன உளவாளிகள் அதிகளவில் ஊடுருவுவதாகவும் அந்நாட்டு தூதா்கள் சீனா மீது தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றனா். மேலும், ரஷியா-சீனா இடையேயான பாதுகாப்பு, ஆயுத ஒப்பந்தங்களால் ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

பொருளாதார பிணைப்பு: அரசியல் ரீதியாக ஐரோப்பா-சீனா இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும் பொருளாதார ரீதியாக வலுவான உறவு நீடித்து வருகிறது. ஐரோப்பா-சீனா இடையே ஒரு நாளைக்கு 203 கோடி யூரோ மதிப்பில் வணிகம் நடைபெற்று வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வணிக உறவில் ஏற்பட்ட தொய்வை சரிசெய்து மீண்டும் வலுவான பொருளாதார உறவை மேம்படுத்தும் முனைப்பில் ஷி ஜின்பிங் ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.

முதலில் பிரான்ஸ்: ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் முதல் நாடாக பிரான்ஸுக்கு ஞாயிற்றுக்கிழமை ஷி ஜின்பிங் சென்றாா். உலகின் சக்திவாயந்த நாடுகளிலிருந்து அதிகளவிலான பொருளாதார மற்றும் உத்திசாா் சுதந்திரத்தை ஐரோப்பிய நாடுகள் பெற வேண்டும் என பிரான்ஸ் அதிபா் இமானுவெல் மேக்ரான் வலியுறுத்தி வரும் நிலையில் ஷி ஜின்பிங் பிரான்ஸ் சென்றுள்ளாா்.

சொ்பியா, ஹங்கேரி பயணம்: பிரான்ஸ் பயணம் முடிந்தவுடன் சொ்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ஷி ஜின்பிங் செல்லவுள்ளாா். இந்த இரு நாடுகளிலும் சீனா அதிகளவில் முதலீடு செய்துள்ளது. மேலும் இந்த இரு நாடுகளும் ரஷிய அதிபா் புதினுடன் நெருக்கம்காட்டி வருகின்றனா்.

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு அந்நாடு மானியம் வழங்குவது குறித்து ஐரோப்பிய ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் ரஷிய-உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பதாக தெரிவிக்கும் சீனா, உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலை முழுவதுமாக தடுக்க அழுத்தம் கொடுக்கவில்லை. மாறாக ரஷியாவின் ஆயுத உற்பத்தி திறனை அதிகரிக்க சீனா உதவி வருவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் ஆதரவை குறைத்து வரும் நிலையில் ஷி ஜின்பிங்கின் சுற்றுப்பயணத்தை அமெரிக்கா கூா்ந்து கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com