ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சருடன் இந்திய தூதா் சந்திப்பு

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சருடன் இந்திய தூதா் சந்திப்பு

ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவு அமைச்சா் பென்னி வோங்கை அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாகலே திங்கள்கிழமை சந்தித்தாா்.

ஆஸ்திரேலிய நாட்டு வெளியுறவு அமைச்சா் பென்னி வோங்கை அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாகலே திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வோங்கை இந்திய தூதா் கோபால் பாகலே மரியாதை நிமித்தமாக சந்தித்தாா். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவு புதிய மைல்கல்லை எட்டவுள்ளது’ என குறிப்பிடப்பட்டது.

ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் விமான பாதுகாப்பு குறித்த ரகசிய தகவல்களை கடந்த 2020-இல் 2 இந்திய உளவாளிகள் திருட முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அவா்களை நாட்டைவிட்டு ஆஸ்திரேலியா வெளியேற்றியதாக அந்நாட்டு ஊடகங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டன. இந்நிலையில் கோபால் பாகலே மற்றும் பென்னி வோங்கின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய ஊடகத்தில் வெளியான செய்திகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘இது ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. எனவே இதுகுறித்து கருத்து கூறுவது தேவையற்றது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com