ராஃபா படையெடுப்பு விவகாரம்: இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா

ராஃபா படையெடுப்பு விவகாரம்: இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா

காஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

இஸ்ரேலுக்கு அனுப்புவதற்காக 900 கிலோ எடை கொண்ட 1,800 வெடிகுண்டுகள், 225 கிலோ எடை கொண்ட 1,700 குண்டுகளை அரசு கடந்த வாரம் தயார் நிலையில் வைத்திருந்து.

எனினும், அந்த ஆயுதங்களின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காஸாவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ராஃபா நகரில் சக்திவாய்ந்த அந்த குண்டுகளைக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற கவலையின் பேரில் இந்த முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளது என்றார் அவர்.

இருந்தாலும், இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ஜீன்-பியரி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகேனியும் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "காஸா போரில் அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு உதவிகளை அளித்துவருகிறது.

இஸ்ரேலைப் பாதுகாப்பது எங்களது பொறுப்பு. அதுமட்டுமின்றி, இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களையும் நாங்கள்தான் பாதுகாத்து வருகிறோம்' என்றார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினர், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். மேலும், அங்கிருந்து சுமார் 240 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. வடக்கு காஸாவில் கடுமையான தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அங்கிருந்து தெற்கு காஸாவுக்கு பொதுமக்கள் இடம்பெயர முதலில் உத்தரவிட்டது.

அதையடுத்து, லட்சக்கணக் கான பொது மக்கள் தங்க ளது இருப்பிடங்களை விட்டு தெற்கு நோக்கி நகர்ந்தனர்.

பின்னர், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டும் தங்களது இலக்கை அடைவதற்காக தெற்கு காஸாவிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்தது. இந்தச் சூழலில், காஸா பொதுமக்களின் கடைசி புகலிடமாகத் திகழும், எகிப்து எல்லையில் அமைந்துள்ள கடைக்கோடி நகரான ராஃபாவிலும் தரைவழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

அங்கு ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதால் தரைவழித் தாக்குதல் அவசியம் என்று இஸ்ரேல் கூறிவருகிறது.

ஆனால், 1 லட்சத்துக்கும் மேலான பொதுமக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த நகரில் தரைவழித் தாக்குதல் நடத்துவது மிகப் பெரிய மனிதப் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா.வும் ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.

ராஃபா மீதான படையெடுப்பைத் தவிர்க்கவேண்டும் என்று அமெரிக்காவும் வலியுறுத்திவருகிறது. இருந்தாலும் தனது திட்டத்தில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் காஸா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று சுமார் 1 லட்சம் பேருக்கு இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, எகிப்துக்கும் ராஃபா நகருக்கும் இடையிலான எல்லையில், பாலஸ்தீனத்துக்குச் சொந்தமான பகுதியை இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை அதிரடியாகக் கைப்பற்றியது.

அந்த எல்லை வழித் தடத்தை "பயங்கரவாத' நடவடிக்கைகளுக்காக ஹமாஸ் அமைப்பு பயன்படுத்துவதாக ராணுவம் கூறியது.

இருந்தாலும், ராஃபா நகர் மீது முழுமையாகப் படையெடுப்பதற்கு முன்னேற்பாடகவே இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், ராஃபா நகர் மீது வீசலாம் என்ற அச்சத்தின் பேரில் இஸ்ரேலுக்கு அனுப்பவிருந்த ஆயுதங்களை அதன் மிக நெருங்கிய ராணுவக் கூட்டாளியான அமெரிக்காவே நிறுத்திவைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com