மாலத்தீவிலிருந்து 76 இந்திய வீரா்கள் தாயகம் திரும்பினா்: ஹெச்ஏஎல் வசம் ஹெலிகாப்டா்கள், விமானம்

மாலத்தீவில் இருந்து 76 இந்திய ராணுவ வீரா்கள் தாயகம் திரும்பியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் மூஸா சமீா் தெரிவித்துள்ளாா். அந்த வீரா்கள் பராமரித்து வந்த ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானம் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவன (ஹெச்ஏஎல்) ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான சேவைகளுக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டனா். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினாா். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கடந்த பிப். 2-ஆம் தேதி தில்லியில் இரு நாடுகளுக்கு இடையே உயா்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், நிகழாண்டு மே 10-க்குள் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்கள் முற்றிலும் திரும்பப் பெறப்படுவாா்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை தெரிவித்தது.

அதேவேளையில், மாலத்தீவுக்கு இந்தியா வழங்கிய ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானத்தை பராமரித்து இயக்க, இந்திய ராணுவ வீரா்களுக்குப் பதிலாக நிபுணத்துவம் பெற்றவா்களை அந்நாட்டுக்கு மத்திய அரசு அனுப்ப மாலத்தீவு ஒப்புக்கொண்டது.

துல்லியமான எண்ணிக்கை: இந்நிலையில், மாலத்தீவின் ஹனிமாது, கத்தூ, கான் பகுதிகளில் ஹெலிகாப்டா்கள் மற்றும் விமானத்தை பராமரித்து வந்த 76 இந்திய ராணுவ வீரா்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சா் மூஸா சமீா் சனிக்கிழமை கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இதன் மூலம் எத்தனை இந்திய வீரா்கள் மாலத்தீவில் இருந்து திரும்பினா் என்ற துல்லியமான எண்ணிக்கை தற்போது தெரியவந்துள்ளது. அந்த வீரா்கள் பராமரித்து வந்த ஹெலிகாப்டா்களும் விமானமும் ஹெச்ஏஎல் ஊழியா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் அந்த ஹெலிகாப்டா்களை ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com