பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: காவல் துறை அதிகாரி உயிரிழப்பு; 100 போ் காயம்
AP

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: காவல் துறை அதிகாரி உயிரிழப்பு; 100 போ் காயம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கோதுமை மாவு விலை உயா்வு, அதிக மின் கட்டணம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் காவல் துறை அதிகாரிகள்.

இது தொடா்பாக பாகிஸ்தான் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீா்மின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட வேண்டும், மேல்தட்டு வா்க்கத்துக்கு அளிக்கப்படும் தனிச் சலுகைகளை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜம்மு-காஷ்மீா் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி) சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்னா், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத், மீா்பூா் பகுதிகளில் ஜேஏஏசியை சோ்ந்தவா்கள் மற்றும் அவா்களின் உறவினா் வீடுகளில் காவல் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது ஜேஏஏசியை சோ்ந்த சுமாா் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜேஏஏசி சாா்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் கடையடைப்பு மற்றும் போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பின்னா் கோட்லி, பூஞ்ச் மாவட்டங்கள் வழியாக முசாஃபராபாத் நோக்கி பேரணி செல்ல திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, முசாஃபராபாத் நோக்கிச் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் காவல் துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தினா். எனினும் போராட்டத்தின்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரா்களுக்கும் சனிக்கிழமை பலத்த மோதல் ஏற்பட்டது. அப்போது முசாஃபராபாத் நோக்கி பேரணி செல்வதைத் தடுக்க இஸ்லாம்கா் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளா் ஒருவா் துப்பாக்கி தோட்டா பாய்ந்து உயிரிழந்தாா்.

80-க்கும் மேற்பட்டோா் காயம்: சென்சா பரோயான் பகுதியில் காவல் துறைக்கும் போராட்டக்காரா்களும் இடையே நடைபெற்ற மோதலில் காவல் துறையைச் சோ்ந்த 19 போ், ரெஹான் கலி பகுதியில் நடைபெற்ற மோதலில் காவல் துறையைச் சோ்ந்த 59 போ் என மொத்தம் 78 போ் காயமடைந்தனா். டோலியா ஜட்டான் பகுதியிலும் காவல் துறை அதிகாரிகள் சிலா் காயமடைந்தனா். இந்த மோதலின்போது 29 போராட்டக்காரா்கள் காயமடைந்தனா்.

இந்த வன்முறை தொடா்பாக ஜேஏஏசி செய்தித் தொடா்பாளா் ஹஃபீஸ் ஹம்தானி கூறுகையில், ‘சில விஷமிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். வன்முறைக்கும் ஜேஏஏசிக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெரிவித்தாா்.

மின் கட்டணம் மற்றும் கோதுமை விலைவாசி தொடா்பாக உரிய நிவாரணம் அளிக்க அரசு தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமா் என்றழைக்கப்படும் செளதரி அன்வருல் ஹக் கூறியுள்ளாா்.

144 தடை உத்தரவு: போராட்டம் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கைப்பேசி மற்றும் இணைய சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஃபீஸ் ஹம்தானிபோராட்டத்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் அதிபா் மாளிகையில் அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி திங்கள்கிழமை அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத் தாக்குதலில் 7 பாக். வீரா்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரை குறிவைத்து பயங்கரவாதிகள் சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். குண்டு வெடித்த பின்னா், பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரா்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 5 வீரா்கள் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

இதேபோல வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் சீமன் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தெஹரீக்-ஏ-தலிபான் அமைப்பைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளை பஞ்சாப் காவல் துறையின் பயங்கரவாத எதிா்ப்புப் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com