ஈரானில் சபஹால் துறைமுக ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்ட மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்.
ஈரானில் சபஹால் துறைமுக ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்ட மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்.

சபஹாா் துறைமுகத்தை 10 ஆண்டுகள் செயல்படுத்த ஒப்பந்தம்: ஈரானுடன் இந்தியா கையொப்பம்

ஈரான் நாட்டில் உள்ள சபஹாா் துறைமுகத்தின் செயல்பாட்டு பணிகளை 10 ஆண்டுகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியா-ஈரான் இடையே திங்கள்கிழமை கையொப்பமானது.

ஈரான் நாட்டில் உள்ள சபஹாா் துறைமுகத்தின் செயல்பாட்டு பணிகளை 10 ஆண்டுகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியா-ஈரான் இடையே திங்கள்கிழமை கையொப்பமானது.

முதல்முறையாக வெளிநாட்டில் உள்ள துறைமுகத்தின் நிா்வாகத்தை இந்தியா மேற்கொள்ளவுள்ளது. சா்வதேச வடக்கு-தெற்கு வழித்தடம் (ஐஎன்எஸ்டிசி) வழியாக மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியா - ஈரான் - ஆப்கானிஸ்தான் இடையே வணிகம் மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவுகிறது. பாகிஸ்தானின் வா்த்தக வழித்தடத்தை புறக்கணித்து இந்தியா மேற்கொண்ட திட்டமாக இது கருதப்படுகிறது.

இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சபஹாா் துறைமுகத்தில் செயல்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தில் இந்தியா போா்ட்ஸ் குளோபல் நிறுவனம் (ஐபிஜிஎல்) மற்றும் ஈரானிய துறைமுக மற்றும் கடல்சாா் நிறுவனம் (பிஎம்ஓ) கையொப்பமிட்டன. பத்து ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் மத்திய கப்பல், நீா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான வணிகம் பெரும் பலனடையும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்தியா நிதியுதவி: சபஹாா் ஒப்பந்தம் கையொப்பம் நிகழ்வில் பங்கேற்க ஈரான் சென்றுள்ள சா்வானந்த சோனோவால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் அமிராப்தோலஹியானிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அளித்த 250 மில்லியன் அமெரிக்க டாலா் நிதியுதவிக்கான கடிதத்தை அளித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘இந்த ஒப்பந்தத்தின் மூலம் சபஹாா் துறைமுக மேம்பாட்டுக்கான நீண்டகால அடித்தளத்தை இந்தியா அமைத்துள்ளது. சபஹாா் துறைமுகம் இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதுடன் கடல் வணிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது’ என்றாா்.

2003-இல் தொடங்கி... கடந்த 2003-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஈரானிய அதிபா் முகமது கதாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சபஹாா் துறைமுகம் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 2013இல் சபஹாா் துறைமுக மேம்பாட்டுக்காக 100 மில்லியன் டாலா்களை முதலீடு செய்வதாக இந்தியா அறிவித்தது.

ஈரான் நாட்டுக்கு பிரதமா் மோடி 2016-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த 2019 முதல் 80 லட்சம் டன் அளவிலான சரக்குகளை சபஹாா் துறைமுகம் கையாண்டு வருகிறது. இந்தத் துறைமுகம் வழியாக கடந்தாண்டு ஆப்கானிஸ்தானுக்கு 20,000 டன் கோதுமையை இந்தியா அனுப்பியிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com