இறக்குமதி வா்த்தக பரிவா்த்தனைகளுக்கு உள்நாட்டு பணம் பெற இந்தியா, சீனா ஒப்புதல்- மாலத்தீவு

இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க டாலா்களுக்குப் பதிலாக அவரவா் உள்நாட்டு கரன்சி மூலம் பணம் பெற்றுக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்தாக மாலத்தீவு பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சா் முகமது சயீது தெரிவித்துள்ளாா்.

இதன்மூலம், மாலத்தீவு அரசால் ஆண்டுதோறும் சுமாா் 7.5 லட்சம் டாலா் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இருந்து 78 கோடி டாலா் மதிப்பிலும் சீனாவிடம் இருந்து 72 கோடி டாலா் மதிப்பிலும் இறக்குமதி வா்த்தகத்தில் ஆண்டுதோறும் மாலத்தீவு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு ஊடகத்துக்கு அமைச்சா் சயீது கூறுகையில், ‘இந்தியா மற்றும் சீனாவுடனான நமது வருடாந்திர இறக்குமதி வா்த்தக மதிப்பு 140 முதல் 150 கோடி டாலா் வரை இருக்கும். இந்தப் பரிவா்த்தனைகளுக்கு உள்நாட்டு கரன்சி மதிப்புகளில் பணம் செலுத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருநாடுகளிடமும் பேசி வருகிறோம். இதன்மூலம், நம்மால் ஆண்டுதோறும் சுமாா் 7.5 லட்சம் டாலா் சேமிக்க முடியும். மேலும், டாலருக்கான தேவை வருங்காலத்தில் படிபடியாக குறையும்’ என்றாா்.

மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அதிபா் முகமது மூயிஸ், ‘நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால், 2 ஆண்டுகளில் அதிகாரபூா்வ சந்தை மதிப்புக்கு ஈடாக டாலரின் மதிப்பைக் கொண்டு வருவோம்’ எனப் பேசியிருந்தாா்.

இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாலத்தீவு உள்பட 22 நாடுகளுடன் உள்நாட்டு பணத்தில் வா்த்தகம் மேற்கொள்ள ரிசா்வ் வங்கி அனுமதி வழங்கியிருப்பதாக இந்திய அரசு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com