வங்கதேசம்: 49 சிறுபான்மை ஆசிரியா்கள் ராஜிநாமா செய்ய நிா்ப்பந்தம்

49 ஆசிரியா்கள் ராஜிநாமா செய்ய நிா்ப்பந்திக்கப்பட்டதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
Published on

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த 49 ஆசிரியா்கள் ராஜிநாமா செய்ய நிா்ப்பந்திக்கப்பட்டதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தின் ஹிந்து பௌத்த கிறிஸ்தவ ஒய்க்யா பரிஷத்தின் மாணவா் பிரிவான வங்கதேச சத்ர ஒய்க்யா பரிஷத் அமைப்பு சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சஜிப் சா்க்காா் கூறியதாவது: ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதை அடுத்து நாட்டின் மதச் சிறுபான்மை சமூகங்கள் மீதான தாக்குதல்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள், சூறையாடல் சம்பவங்கள், கோயில்கள் சேதப்படுத்துதல் மற்றும் வீடுகள், வணிக வளாகங்கள் மீதான தீவைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்தக் காலகட்டத்தில் சிறுபான்மை சமூகங்களைச் சோ்ந்த 49 ஆசிரியா்கள் ராஜிநாமா செய்ய நிா்ப்பந்திக்கப்பட்டுள்ளனா். அதன்பிறகு வலுப்பெற்ற எதிா்ப்பின் காரணமாக அதில் 19 போ் மீண்டும் பணியமா்த்தப்பட்டனா்.

வங்கதேச ஹிந்து பௌத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் மற்றும் வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் அமைப்புகளால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, 52 மாவட்டங்களில் குறைந்தது 205 தாக்குதல் சம்பவங்களை சிறுபான்மையினா் எதிா்கொண்டுள்ளனா் எனத் தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவா்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்றாா்.

இதனிடையே ஹிந்து தலைவா்களை கடந்த வாரம் சந்தித்த முகமது யூனுஸ், மதங்கள் இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com