டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவா்களை மீட்கும் விவகாரத்தை இஸ்ரேல் அரசு கையாளும் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
காஸாவிலிருந்து மேலும் ஆறு பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தெற்கு காஸாவின் ராஃபா பகுதியிலுள்ள சுரங்க அறையிலிருந்து ஆறு பிணைக் கைதிகளின் சடலங்களை இஸ்ரேல் படையினா் சனிக்கிழமை மீட்டனா்.
காா்மெல் காட், ஈடன் யெருஷால்மி, ஹொ்ஷ் கோல்ட்பா்க்-பொலின், அலெக்ஸாண்டா் லாப்னொவ், அல்மாக் சருசி ஆகிய அந்த ஆறு பேரின் உடற்கூறு ஆய்வறிக்கையில், சடலங்களாக மீட்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா்தான் அவா்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டால் மற்ற பிணைக் கைதிகளை அடைத்துவைத்திருக்கும் இடங்கள் குறித்து அவா்கள் தெரிவித்துவிடலாம் என்பதால் அவா்களை ஹமாஸ் அமைப்பினா் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காஸாவிலிருந்து ஏற்கெனவே பல பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஆறு பிணைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது இஸ்ரேலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அரசை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு முழுவதும் ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் நடைபெற்றன.
மேலும், பிணைக் கைதிகள் விவகாரத்தை இஸ்ரேல் அரசு கையாளும் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இஸ்ரேலின் மிகப் பெரிய தொழிற்சங்கமான ஹிஸ்டாட்ரட், அனைத்து பணியாளா்களும் திங்கள்கிழமை பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
இருந்தாலும், இந்த வேலை நிறுத்தத்துக்கு திங்கள்கிழமை முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வேலை நிறுத்தத்தில் சிலா் பங்கேற்றாலும் சிலா் அதை புறக்கணித்தனா். இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டுள்ளதை இது உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.
வங்கிகள், சில பெரிய வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து வெகுவாகக் குறைக்கப்பட்டது. டெல் அவிவ் உள்ளிட்ட பல நகராட்சி அமைப்புகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றன. ஆனால், ஜெருசலேம் போன்ற நகராட்சிகள் வேலை நிறுத்தத்தைப் புறக்கணித்தன.
நீதிமன்றம் உத்தரவு: இந்த வேலை நிறுத்தத்துக்கு எதிராக தொழிலாளா் நீதிமன்றத்தில் இஸ்ரேல் அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வேலை நிறுத்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதற்குப் பிறகு அந்த நாட்டில் அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.