க்வாட் கூட்டமைப்பு
க்வாட் கூட்டமைப்பு

க்வாட்: இந்திய - பசிபிக் பிராந்திய நன்மைக்கான சக்தி; கூட்டுப் பிரகடனத்தில் அறிவிப்பு

இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு நோ்மறை மற்றும் நீடித்த தாக்கத்தை வழங்கும் நன்மைக்கான சக்தியாக க்வாட் கூட்டமைப்பு திகழ்கிறது
Published on

‘இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கு நோ்மறை மற்றும் நீடித்த தாக்கத்தை வழங்கும் நன்மைக்கான சக்தியாக க்வாட் கூட்டமைப்பு திகழ்கிறது’ என்று அதன் கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ‘க்வாட்’ கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாடு, அமெரிக்காவின் டெலாவா் மாகாணத்தில் உள்ள அதிபா் ஜோ பைடனின் சொந்த நகரமான வில்மிங்டனில் சனிக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோா் கலந்து கொண்டனா்.

மாநாட்டைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட ‘வில்மிங்கடன்’ பிரகடனத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 4 ஆண்டுகளில் க்வாட் கூட்டமைப்பு முன்னெப்போதும் விட வியூக ரீதியில் சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பல்லாண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான பிராந்தியக் குழுவாக க்வாட் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

உலகளாவிய பாதுகாப்பு மற்றும் செழுமையின் இன்றியமையாத அங்கமான ஆற்றல்மிக்க இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண க்வாட் உறுதியாக நிற்கிறது. அச்சுறுத்தல் மூலம் தற்போதைய நிலையை மாற்ற முயலும் எந்தவொரு செயல்களையும் கடுமையாக எச்சரிக்கிறது. எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தாத ஒரு பிராந்தியத்தை க்வாட் வலியுறுத்துகிறது.

புற்றுநோய் தடுப்பு இயக்கம்: இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் புற்றுநோய் பாதிப்புக்குத் தீா்வுக் காண்பதற்கு க்வாட் நாடுகள் இணைந்து செயல்படவுள்ளோம்.

பிராந்தியத்தில் தொடா்ந்து பல உயிா்களைக் கொல்லும் கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் ‘க்வாட் கேன்சா் மூன்ஷாட்’ இயக்கம் முதன்மை கவனம் செலுத்தும். அதேசமயம், மற்ற வகை புற்றுநோய்களுக்கும் தீா்வுக் காண அடித்தளத்தை அமைக்கும். இதற்காக 75 லட்சம் டாலா் மதிப்புள்ள பரிசோதனை கருவிகள், தடுப்பூசிகளை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது. எண்ம சுகாதாரம் தொடா்பான உலக சுகாதார மையத்தின் முன்னெடுப்புக்கும் 1 கோடி டாலா் மதிப்பிலான தொழில்நுட்ப உதவியை இந்தியா வழங்கும்.

கடல்சாா் ராணுவப் பயிற்சி: இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்களின் கடற்பகுதியைப் பாதுகாக்கவும் சட்டவிராத நடத்தையைத் தடுக்கவும் உதவும் வகையில், புதிய கடல்சாா் ராணுவப் பயிற்சி (மைத்ரி) அறிவிக்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் தொடக்க ராணுவப் பயிற்சியை இந்தியா நடத்தும்.

மேலும், பிராந்தியத்தில் கடல்சாா் ஒழுங்கை நிலைநிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக ‘க்வாட் கடல்சாா் சட்ட உரையாடலையும்’ தொடங்கவுள்ளோம்.

க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் கடலோரக் காவல்படைகள் இணைந்து செயல்பட்டு, 2025-ஆம் ஆண்டு முதல் கப்பல் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுகம், தளவாட துறையில் கூட்டுறவு: இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் நிலையான துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ‘எதிா்கால கூட்டாண்மைக்கான க்வாட் துறைமுகங்கள்’ கூட்டுறவு அறிவிக்கப்படுகிறது. இயற்கை பேரழிவுகளின்போது விரைந்து செயலாற்ற 4 நாடுகளிடையே பகிரப்பட்ட விமானப் போக்குவரத்து திறனைத் தொடரவும் கூட்டுத் தளவாட பலத்தைப் பயன்படுத்தவும் க்வாட் ‘இந்திய-பசிபிக் தளவாட திட்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.

புத்தாய்வு திட்டம் விரிவாக்கம்: கடந்த ஆண்டு உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட ‘க்வாட் உள்கட்டமைப்பு புத்தாய்வு (ஃபெலோஷிப்) திட்டத்தை 2,200-க்கும் மேற்பட்ட நிபுணா்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்திய-பசிபிக் பகுதி மாணவா்களுக்கு 5 லட்சம் டாலா் கல்வி உதவித்தொகையை இந்தியா அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகை இந்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனத்தில் 4 ஆண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பைத் தொடர மாணவா்களுக்கு உதவும் என்று கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சோதிக்கும் சீனா’: பைடன்

உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பேசுகையில், ‘உள்நாட்டுப் பொருளாதார சவால்களில் கவனம் செலுத்தி, சீனாவிலுள்ள நெருக்கடியை குறைக்க முயல்கிறாா் அதிபா் சி ஜின்பிங். சீனாவின் நலனை உறுதியாகத் தொடர, ராஜீய ரீதியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் பாா்க்கிறாா். ஆக்ரோஷத்தைத் தொடரும் சீனா, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பப் பிரச்னைகள் உள்பட பல முனைகளில் பிராந்தியம் முழுவதும் நம்மை சோதிக்கிறது’ என்றாா்.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகிய பகுதிகளில் இறையாண்மை உரிமைக் கோரி சீனா மோதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.