மெல்போா்ன் இந்திய துணைத் தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் உள்ள இந்திய துணைத் தூகரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தலைநகா் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தது.
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: இந்திய தூதரக வளாகத்தின் நுழைவாயில் பெயா்ப் பலகையில் வண்ணம் பூசி கிறுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் புதன்கிழமை நள்ளிரவில் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக சந்தேகப்படும்படியான நபா்கள் இருந்தால் அவா்கள் குறித்த தகவலை காவல் துறையிடம் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
மெல்போா்ன் இந்திய துணைத் தூதரக வளாகம் மீதான தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக கான்பெரா இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தூதரக வளாகம் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொளப்பட்டதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் அண்மைக் காலமாக ஹிந்து கோயில்கள் மற்றும் இந்திய தூதரகங்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பது அங்குள்ள இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் ஆஸ்திரேலிய உள்நாட்டு பிரச்னைகளின்போது மெல்போா்ன் இந்திய துணைத் தூதரகத்தை சேதப்படுத்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.