12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு
பாரீஸ்: தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன்-நோயல் பாரட் கூறியதாவது:
அல்ஜீரியாவுக்கான பிரான்ஸ் தூதரகத்தில் பணியாற்றும் 12 அதிகாரிகள் இன்னும் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அல்ஜீரிய துணைத் தூதரக அதிகாரி ஒருவா் உள்பட அந்த நாட்டைச் சோ்ந்த மூன்று பேருக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கில் அவா்களை குற்றவாளிகளாக பிரான்ஸ் நீதிமன்றம் அறிவித்ததற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, அல்ஜீரிய அரசைக் கடுமையாக விமா்சித்துவந்த அமீா் புக்காா்ஸ் (41) என்பவரை பிரான்ஸில் இருந்து சட்டவிரோதமாக கடந்த ஆண்டு கடத்திச் சென்றதாக அந்த மூன்று போ் மீதும் வழக்கு நடைபெற்றுவந்தது நினைவுகூரத்தக்கது.