நடந்தவை என்ன? உலகம்

2020 - ஆண்டு முழுவதும் உலகில் நிகழ்ந்த முக்‌கிய நிகழ்‌வுகள்
நடந்தவை என்ன? உலகம்

ஜனவரி

1     கரோனா முதல் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகர இறைச்சி சந்தை "சுத்தப்படுத்தும்' பணிகளுக்காக மூடப்பட்டது. அந்த நகரைச் சேர்ந்த 266 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

3    இராக்கில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் உளவுப் படைத் தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் இராக் துணை ராணுவப் படை துணைத் தளபதி அபு மஹதி அல்-முஹாந்திஸும் இந்தத் தாக்குதலில் பலியானர். இந்தச் சம்பவம், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது.

8    ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானத்தை அமெரிக்க ஏவுகணை என்று தவறாகக் கருதி ஈரான் ராணுவம்  சுட்டுவீழ்த்தியது. இதில், விமானத்திலிருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.

9    பல மாத இழுபறிக்குப் பிறகு, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) ஒப்புதலை அந்த நாட்டு நாடாளுமன்றம் வழங்கியது.

23    உலகை அச்சுறுத்தும் கரோனா குறித்து செய்திகள் வெளிவரத் தொடங்கின. அந்த நோயின் தோற்றுவாயான வூஹான் மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் சீனா பொதுமுடக்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, கரோனா தொடர்பான உலக நாடுகளின் அச்சம் அதிகரிக்கத் தொடங்கியது.

31    ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஐரோப்பிய யூனியன் அங்கமாக இருந்து வந்த பிரிட்டன், அந்த அமைப்பிலிருந்து அதிகாரபூர்வமாக விலகியது.

பிப்ரவரி


7    கரோனா அபாயம் குறித்து முதல் முதலில் எச்சரிக்கை விடுத்த சீனாவின் வூஹான் நகர மருத்துவர் லீ வென்லியாங் (34), அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தார். உண்மைகளை வெளியிட்டதால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்ட அவரது மரணம், சீன அரசுக்கு எதிரான கொந்தளிப்பை இணையதளத்தில் ஏற்படுத்தியது.

29    18 ஆண்டுகால ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்காவுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான 
வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மார்ச்


4    கரோனா பரவலைத் தடுப்பதற்காக, மெக்காவில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு சவூதி அரேபியா தடை விதித்தது.

11    கரோனாவை சர்வதேச அளவிலான கொள்ளை நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 

27    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல்


11    கரோனாவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை பலி கொடுத்த முதல் நாடாக அமெரிக்கா ஆனது.

15    கரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்திவைத்தார்.

மே


22    இராக்கிலிருந்து வந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில், அந்த விமானத்திலிருந்த 97 பேர் பலியாகினர். இரு பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். குடியிருப்புப் பகுதியில் பல வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தபோதிலும், 8 பேர் மட்டும் காயமடைந்தனர்; அதில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார். 

28    ஹாங்காங் தொடர்பான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா இயற்றுவதற்கு வகை செய்யும் மசோதா, அந்த நாட்டின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் இறுதி நாளன்று, ஹாங்காங் ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களை அடக்கும் வகையிலான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.


ஜூன்


30    சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி, ஹாங்காங்கில் தனது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியது.

ஆகஸ்ட்


4    லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் பல ஆண்டுகளாக வைக்கப்படிருந்த அமோனியம் நைட்ரேட்டால் ஏற்பட்ட மிகப் பெரிய வெடி விபத்தில் 190 பேர் பலியாகினர்.

7    இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபட்ச சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

11    அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் பெயரை ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அறிவித்தார்.

13. இஸ்ரேலுடன் முழுமையான தூதரக உறவை ஏற்படுத்திக்கொள்ளவிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. 

20    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அந்தப் பதவிக்குப் போட்டியிட்ட முதல் கருப்பின, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

செப்டம்பர்


27. ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய நகார்னோ}கராபக் பிராந்தியத்தில், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அக்டோபர்


2    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.

17    3}ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ஊடகங்கள் அறிவித்தன.

20    கூகுள் நிறுவனம் இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தி போட்டியாளர்களை வீழ்த்துவதாகவும், விளம்பரங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து பயன்பாட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடுத்தது. 

டிசம்பர்


4    அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான மக்கள் பிரதிநிதிகள் வாக்கெடுப்பில், ஜோ பைடன் அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றார்.
    கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்தது.

5    ரஷியாவில் உருவாக்கப்பட்ட "ஸ்புட்னிக்-5' கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குப் போடும் பணிகள் தொடங்கின.

8    எவரெஸ்ட் சிகரத்தின் உயரம், 1954}ஆம் ஆண்டு அறிவித்ததைவிட 86 செ.மீ. அதிகரித்து 8,848.86 மீட்டர் ஆக உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்தன.

ஃபைஸர் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த பிரிட்டன் அனுமதி அளித்தது.

பிரிட்டனில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. இதன் மூலம், முழுமையாக சோதிக்கப்பட்ட, மருத்துவரீதியில் செயல்திறனும், பாதுகாப்பும் நிரூபிக்கப்பட்ட தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்திய முதல் நாடாக பிரிட்டன் ஆனது.

12    உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 கோடியைத் தாண்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com