கரோனா காலத்தைக் கடந்த தேர்தல்கள்!

கரோனாவிற்கு மத்தியில் 2020-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்கள்.
கரோனா காலத்தைக் கடந்த தேர்தல்கள்!

தேர்தல் என்பது வெறும் நிகழ்வு அல்ல. இந்திய ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை ஆளும் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கிடைத்த வாய்ப்பு. 

முதன்முதலில் 1951 ஆம் ஆண்டு 489 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 53 கட்சிகளும் 533 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் 45.70% வாக்குகள் பதிவாகின. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்றது.

இவ்வாறு தொடங்கிய நமது தேர்தல் வரலாறானது ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒருமுறை மத்திய அரசிற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநில அரசுகளுக்கான சட்டப்பேரவை மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் என்கிற தன்னாட்சி அமைப்பு நடத்தி வருகின்றது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக உலகமே நிலைகுலைந்து நின்ற நிலையிலும் 2020 ஆம் ஆண்டில் வேறு சில நாடுகளைப் போல இந்தியாவிலும்  பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் ஆகியவை  சற்று பதற்றத்துடனே நடைபெற்றன. 

தொட்ட இடமெல்லாம் பரவும் நோய்க்கு மத்தியில் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது என்பது தேர்தல் ஆணையத்திற்கு தயக்கத்துடன் கூடிய பெரும் சவாலாகவே இருந்தது.

பொதுவாகவே தேர்தல் என்பது ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் நிகழ்வல்ல. வேட்பாளர் மனுத் தாக்கல் தொடங்கி பிரசாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, அதற்கு பிறகான முடிவு அறிவிப்பு என ஒரு திருவிழா போல் பல நாள்கள் நடக்கக்கூடிய நிகழ்வு.

இந்நிலையில் மத்தியில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக கூட்டணி அரசு அனைத்து மாநிலங்களிலும் தனது ஆட்சியை ஏற்படுத்தும் முனைப்பிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும், தனது பலத்தை நிரூபிக்கும் முனைப்பிலும் 2020 தேர்தலில் களம் கண்டன.

கரோனா மத்தியில் நடைபெற்ற தேர்தல்கள் வழக்கத்துக்கு மாறாக அதிமுக்கியத்துவம் பெற்றவையாக மாறியுள்ளன. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு திரைப்பட இறுதிக் காட்சியாகவே தேர்தல் முடிவுகள் அமைந்தன.

பிகார் சட்டப்பேரவை

2020ம் ஆண்டுடன் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடைந்த நிலையில், 243 தொகுதிகள் கொண்ட பிகாரின் 17-வது சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தொடர்ந்து 4ஆவது முறையாக நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியுடன் தேர்தல் களத்தில் இறங்கின. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் களம் கண்டன.

தேர்தல் அறிவித்த நாள் முதலே பரபரப்பாக இருந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு அக். 28 தொடங்கி நவ 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது.

இதில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று நான்காவது முறையாக மீண்டும் ஆட்சி அமைத்தது. இருப்பினும் இறுதி வரை கடுமையான போட்டியைத் தந்த ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

கட்சியின் பெயர்வெற்றி பெற்ற  தொகுதிகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணி:

பா.ஜ.க. -74

ஐக்கிய ஜனதா தளம் -43

வி.ஐ.பி. - 4

ஹெச்.ஏ.எம். - 4

125

மகா கூட்டணி

ராஷ்டிரிய ஜனதா தளம் -75

காங்கிரஸ் -19

இடதுசாரிகள் -16

110
மற்றவை8

இடைத்தேர்தல்கள்

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 59 தொகுதிகளின் உறுப்பினர்களுக்கான காலியிடங்கள் காரணமாகக் குறிப்பிட்ட அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதில், மத்தியப் பிரதேசம் (28), குஜராத் (8), உத்தரப் பிரதேசம் (7), நாகாலாந்து (2), ஜாா்க்கண்ட் (2), ஒடிசா (2), கா்நாடகம் (2), தெலங்கானா (1), ஹரியாணா (1), சத்தீஸ்கர் (1) ஆகிய தொகுதிகளுக்கு நவ. 3-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டது.

மணிப்பூா் சட்டப் பேரவையில் காலியாக இருந்த 5 இடங்களுக்கு கடந்த 7-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 தொகுதி உறுப்பினர்களில் 26 பேர் காங்கிரஸிலிருந்து மார்ச் மாதம் விலகியதால் கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, ம.பி. இடைத்தேர்தலில் பாஜக குறைந்தது 8 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஆட்சியை தொடர முடியும் என்ற சூழலில் தேர்தலைச் சந்தித்தது. 

இதேபோல் மணிப்பூர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்கிரஸிலிருந்து விலகி பலரும் பாஜகவில் இணைந்தனர்.

இந்த இடைத்தேர்தல்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

மாநிலம்மொத்த தொகுதிகள்வெற்றி பெற்றவர்கள்
மத்திய பிரதேசம்28

பாஜக -19

காங்கிரஸ் -9

குஜராத்8பாஜக -8
உத்தரப் பிரதேசம்7

பாஜக -6

சமாஜவாதி -1

ஜார்க்கண்ட்2

காங்கிரஸ் -1

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -1 

கர்நாடகம்2பாஜக -2
நாகாலாந்து2

தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி -1

சுயேச்சை -1

ஒடிசா2பிஜு ஜனதா தளம் -2
மணிப்பூர்5

பாஜக -4

சுயேச்சை -1

ஹரியாணா1காங்கிரஸ் -1
சத்தீஸ்கா்1காங்கிரஸ் -1
தெலங்கானா1பாஜக -1

ஜம்மு - காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 280 தொகுதிகளுக்கு மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தல் நவம்பர் 8இல் தொடங்கி டிசம்பர் 19-இல் முடிவடைந்தது.

இந்த தேர்தலில், ஜம்மு - காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசை ஆளும் பாஜக தனியாகவும், காங்கிரஸ் தனியாகவும் களம் கண்டன.

பாஜகவின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்தித்தன.

நாங்கள் வெற்றி பெற்றால் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைத் திரும்பக் கொண்டுவருவோம் என்ற பிரசாரத்தை மையமாக கொண்டு தேர்தலை சந்தித்தது குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி.

இந்தத் தேர்தலில் 51.76 சதவிகித வாக்குகள் பதிவாகின.

குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி அதிகபட்சமாக 110 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 75 இடங்களில் வெற்றி பெற்றது.

கட்சியின் பெயர்வெற்றி பெற்ற தொகுதிகள்

குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி:

தேசிய மாநாட்டு கட்சி - 67
மக்கள் ஜனநாயக கட்சி - 27
தேசிய மாநாட்டு கட்சி - 8
சிபிஐஎம் -5
ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம்  - 3
 

110
பாஜக 75
காங்கிரஸ் 26
அப்னி கட்சி12
சுயேட்சை வேட்பாளர்கள்50
இதர கட்சிகள்5

கேரள உள்ளாட்சித் தேர்தல்

மத்தியில் ஆளும் பாஜக அரசு கால் பதிக்க முடியாத மாநிலமாக இருந்த கேரளத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், கேரளத்தை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றும் பாஜக ஆகியவை தனித்தனியே களமிறங்கின.

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது.

சமீப காலமாக, கேரள தங்க கடத்தல் வழக்கு மற்றும் சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை நடத்திவந்தனர். அதேவேளையில் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த வளர்ச்சி பணிகளை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டது இடது முன்னணி அரசு.

கரோனாவிற்கு மத்தியில் டிச. 8, 10, 14 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 76.63% வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் இடது முன்னணி அரசு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

 கிராம ஊராட்சிஊராட்சி ஒன்றியங்கள்மாவட்ட ஊராட்சிநகராட்சிமாநகராட்சி
இடதுசாரி ஜனநாயக முன்னணி51410810353
ஐக்கிய ஜனநாயக முன்னணி375444453
தேசிய முற்போக்கு கூட்டணி230020
மற்றவை
 
290040
மொத்தம்94115214866

அசாம் உள்ளட்சித் தேர்தல்

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் 40 உறுப்பினர்கள் மற்றும் திவா வளர்ச்சி கவுன்சிலின் 37 உறுப்பினர்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, பின் ஒரு கூட்டணி

போடோலாந்து பிராந்திய கவுன்சிலிற்கு 2 கட்டங்களாக டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக, போடோ முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்து பிரசாரத்தை மேற்கொண்டது.

தேர்தல் முடிவில் பாஜக -9, போடோ முன்னணி- 17, ஐக்கிய லிபரல் மக்கள் கட்சி (யுயுபிஎல்)- 12, கன சுரக்ஷா கட்சி (ஜிஎஸ்பி)- 1, காங்கிரஸ்- 1 இடங்களைக் கைப்பற்றியதால், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து, போடோ முன்னணி கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, ஐக்கிய லிபரல் மக்கள் கட்சி மற்றும் கன சுரக்ஷா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனிடயே திவா கவுன்சிலுக்கான தேர்தல் டிசம்பர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக, அசாம் கண பரிஷத்துடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. இதில் காங்கிரஸ் தனியாகக் களம் கண்டது.

இந்தத் தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி (பாஜக -33, அசாம் கண பரிஷத் -1) 34 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

கரோனா பெருந்தொற்றுக்கு இடையே சட்டப்பேரவை முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை பாதுகாப்புடனும், அமைதியான முறையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் குறைந்திருக்கும் சூழலில் தற்போது பிரிட்டனில் இரண்டாவது அலையாக இதைவிட வேகமாக பரவும் மரபணு கொண்ட கரோனா பரவி வருகின்றது.

இந்த நிலையில்தான் புத்தாண்டில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தற்போது நடத்தப்பட்டது போலவே அந்த தேர்தல்களும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுமா அல்லது கரோனாவின் இரண்டாம் அலையால் தள்ளிப் போகுமா என்பது விரைவில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com