2020ல் கரோனாவால் காலமான புள்ளிகள்

மறக்க முடியாத கரோனா காலமான 2020 ஆம் ஆண்டில் கரோனாவுக்குப் பலியான தலைவர்கள், பிரமுகர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
2020ல் கரோனாவால் காலமான புள்ளிகள்

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டையும் கடந்துசெல்வதைப்  போல் 2020-ஐ எளிதாக யாராலும் கடந்துவிட முடியாது. 2020 ஆண்டு சந்தித்த பிரச்னைகளைப் பற்றி நமது வாழ்நாளில் ஒருமுறையாவது நினைவுகூற வேண்டி வரலாம். அந்த அளவிற்கு கரோனா நோய்த் தொற்றால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின.

இந்தியாவில் கரோனா பரவியதில் இருந்து சாதாரண குடிமகன் முதல் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரை உலக பிரபலங்கள் என பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் குணமடைந்து திரும்பியிருக்கின்றனர். சிலர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து நினைவுகளாக மாறிவிட்டனர்.

கரோனாவால் இழந்த பிரமுகர்களில் சிலர்:

பிரணாப் முகர்ஜி​

நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி (84). மூளையில் ஏற்பட்ட கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிக்சை மேற்கொண்ட பிறகு கோமாவிற்கு சென்ற நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மாலை காலமானார்.

காங்கிரஸ் ஆட்சியின்போது இவர் வகிக்காத மத்திய அமைச்சரவை பதவிகளே கிடையாது எனக் கூறினால் மிகையில்லை.

எச். வசந்தகுமார்

கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினரான எச். வசந்தகுமார் (70). கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிக்சை பலனளிக்காமல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாலை காலமானார்.

இவர், தமிழகம், புதுச்சேரியில் 64 கிளைகளைக் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் சங்கிலித் தொடர் நிறுவனத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அமைச்சர் துரைக்கண்ணு

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தவர் துரைக்கண்ணு (64). அக்டோபர் 13 ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் நவம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு சிகிக்சை பலனளிக்காமல் காலமானார்.

ஜெ. அன்பழகன்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் திமுகவை சேர்ந்த ஜெ.அன்பழகன். இவர், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூன் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜூன் 10ஆம் தேதி காலை காலமானார். தமிழகத்தில் அரசியல் தலைவர்களில் இவர்தான் முதன்முதலில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்.

வெற்றிவேல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் (60), கரோனாவால் பாதிக்கப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி காலமானார். 

ராமகோபாலன்

ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் (94) கரோனாவிற்கு பிந்தைய நோயால் அக்டோபர் 30ஆம் தேதி காலமானார்.

எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம்

புகழ்பெற்ற எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அக்டோபர் 3-ல் காலமானார்.

எழுத்தாளர் சுகதகுமாரி

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கேரளத்தைச் சோ்ந்த பிரபல எழுத்தாளரும், சமூக சேவகருமான சுகதகுமாரி டிசம்பர் 23ஆம் தேதி காலமானாா்.

சுரேஷ் அங்கடி

கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பணியாற்றியவர் சுரேஷ் அங்கடி (65). கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்டம்பர் 23 ஆம் தேதி காலமானார்.

தருண் கோகோய்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அசாம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகோய் (84), கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளால் நவம்பர் 23 ஆம் தேதி காலமானார்.

அகமது படேல்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 25ஆம் தேதி காலமானார்.

வினோத் சிங்

பிகாரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான வினோத் சிங் (50), கடந்த ஜூன் மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டாலும் கரோனாவிற்கு பிந்தைய பாதிப்பால் அக்டோபர் 12ஆம் தேதி காலமானார்.

கபில் தேவ் காமத்

பிகாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் அமைச்சரான கபில் தேவ் காமத் (69) கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி அக்டோபர் 16 ஆம் தேதி உயிரிழந்தார். இவர், கரோனாவிற்கு பலியான இரண்டாவது பிகார் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமல் ராணி வருண்

உத்தரப் பிரதேசத்தின் கல்வித் துறை அமைச்சர் கமல் ராணி வருண் (62), ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை கரோனாவால் பலியானார்.

சேதன் செளகான்

உத்தரப் பிரதேச அமைச்சரும், பிரபல கிரிக்கெட் வீரருமான சேதன் செளகான் (72) ஆகஸ்ட் 16ஆம் தேதி கரோனாவால் காலமானார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்​

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (74). பின், கரோனாவிலிருந்து மீண்ட அவர், பிந்தைய பாதிப்பான நுரையீரல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் 51 நாள்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு செப்டம்பர் 25 ஆம் தேதி மறைந்தார்.

இவர், பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளோரன்ட் பெரைரா

தமிழ்த் திரைப்படங்களான புதிய கீதை, தர்மதுரை, அயோக்கியா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ப்ளோரன்ட் பெரைரா (67). கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், செப்டம்பர் 14ஆம் தேதி காலமானார்.

இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல தொலைக்காட்சிகளின் நிர்வாகப் பொறுப்புகளிலும் இருந்து வந்தார்.

வாஜித் கான்

பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளா் வாஜித் கான் (42), கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு ஜூன் 1ஆம் தேதி உயிரிழந்தார்.

டாக்டர் சேகர் பாசு

மூத்த அணு விஞ்ஞானியும், இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் பாசு(68) செப்டம்பர் 29ஆம் தேதி கரோனா பாதிப்பால் மறைந்தார். 

கிம் கி டுக்

உலகப் புகழ் பெற்ற கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்(வயது 59), டிசம்பர் 11ஆம் கரோனா தொற்று காரணமாக பலியானார்.  

இளவரசி மரியா தெரசா

கரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா(86)  மார்ச் 22ஆம் தேதி காலமானார். இவர், அரச குடும்பத்தில் கரோனாவால் உயிரிழந்த முதல் நபர் ஆவார்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மக்கள் ரசிக்கின்ற பிரபலங்கள் உயிரிழக்கும் போது, அனைவரும் சோகத்தில் ஆழ்வது இயல்பு. ஆனால் 2020-ல் கரோனா பெருந்தொற்றால், நாம் அதிகம் நேசித்த பல முக்கிய பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com