நடந்தவை என்ன? - இந்தியா

2020 - ஆண்டு நெடுகிலும் நாடு முழுவதும் நடந்தவை என்னென்ன?
நடந்தவை என்ன? - இந்தியா

ஜனவரி

20: பாஜகவின் தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா ஒருமனதாகத் தேர்வு.

23: கேரளத்தில் கரோனா அறிகுறிகளுடன் சீனாவில் இருந்து வந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

27: ஆந்திரத்தில் சட்ட மேலவையை கலைக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

29: கரோனா பரவலால் சீனாவுக்கு ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம்.

30: இந்தியாவில் முதல் கரோனா நோயாளியாக, சீனாவின் வூஹான் நகரில் இருந்து கேரளம் திரும்பிய மாணவிக்கு கரோனா தொற்று உறுதி.

பிப்ரவரி

1: மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த úக்ஷத்ர அறக்கட்டளை அமைப்பு.

9: சீன அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு. கரோனா பரவலைத் தடுக்க உதவுவதாக உறுதி.

11: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி. 8 இடங்களில் பாஜக வெற்றி.

16: தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு.

24: குஜராத்தில் உள்ள மொடேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்பு.


மார்ச்


10: காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா விலகல். மறுநாள் பாஜகவில் இணைந்தார்.

11: கரோனா தொற்றை, பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா.

12: இந்தியாவில் கரோனாவுக்கு முதல் பலியாக, கர்நாடக மாநிலம், கலபுர்கியில் 76 வயது முதியவர் உயிரிழப்பு.

20: மத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்.

20: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வர், தில்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

23: மத்திய பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் செளஹான் பதவியேற்றார்.

24: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாள் தேசிய பொதுமுடக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.

ஏப்ரல்

5: பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடே ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகளை நாட்டு மக்கள் ஏற்றினர்.

6: கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் தங்களது ஊதியத்தில் 30 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர். நாடாளுமன்ற எம்.பி.க்களின் ஊதியம் ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைக்கப்பட்டது. எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி இரு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

14: சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18: சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடுகளுக்கு, முன்அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை அண்டை நாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதைத் தடுப்பதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

22: மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை வழங்கும் வகையில் தொற்றுநோய்கள் சட்டம், 1897-இல் திருத்தம் மேற்கொண்டு, அது தொடர்பாக அவசரச் சட்டமியற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

23: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை 2021-ஆம் ஆண்டு ஜூன் வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

27: சீன நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரோனா விரைவு பரிசோதனைக் கருவிகள் தரம் குறைந்தவையாக உள்ளதால், அவற்றை அந்நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்புமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியது.

27: ராணுவத்துக்கு அதிக அளவில் செலவிடும் நாடுகளின் பட்டியலில் ரஷியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா (சுமார் ரூ.50 லட்சம் கோடி) 3-ஆவது இடத்தைப் பிடித்தது. அமெரிக்கா, சீனா ஆகியவை முதல் 2 இடங்களைப் பிடித்தன.

மே

7: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஸ்டைரீன் விஷவாயு கசிந்து 12 பேர் பலி; 350-க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

8: மத்திய பிரதேசத்தின் ஒளரங்காபாத் அருகில், ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி 16 பேர் பலி.

11: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, ஜாமீன் தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்குத் தனிநீதிபதி அமர்வு அமைப்பு.

12: பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

13: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

13: மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) வீரர்களுக்கான அங்காடிகளில் உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

14: நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தலா 5 கிலோ உணவு தானியம், குடும்பத்துக்குத் தலா 1 கிலோ பருப்பு இலவசம் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

16: பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. நிலக்கரி, விண்வெளித் துறைகளிலும் தனியாருக்கு அனுமதி.

18: கரோனா நோய்த்தொற்று தோன்றியது தொடர்பாக பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை உலக சுகாதார அமைப்பு நடத்துவதற்கான தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 62 நாடுகள் ஒப்புதல் அளித்தன.
20: வங்கக் கடலில் உருவான "உம்பன்' புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழையும் பெய்தது. புயலால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

25: இரண்டு மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது.

ஜூன்

8: 75 நாள்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் திறக்கப்பட்டன. சில மாநிலங்கள் அவற்றுக்கான தடை தொடரும் என்று அறிவிப்பு.

13: இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

15: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் கர்னல் உள்பட இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவில் விரிசல் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது.

17: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக 8-ஆவது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. 184 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜனவரி மாதம் முதல் இரு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படும்.

23: அதிகரித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியது.
25: 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வும், நடத்தப்படாமல் மீதமிருந்த 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது.

29: "டிக்டாக்', "ஷேர் இட்' உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

ஜூலை

6: 8 லட்சம் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் வேலை இழக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கும் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு குவைத் நாடாளுமன்றம் ஒப்புதல்.

10: உத்தர பிரதேசத்தில் 8 போலீஸார் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபல ரௌடி விகாஸ் துபே, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் தப்பியோட முயன்றபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

11: கேரளத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

13: கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

29: புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயர் மத்திய கல்வி அமைச்சகம் என மாற்றம்.

31: ஆந்திரத்தில் அமராவதி நகரை சட்டப்பேரவைத் தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், கர்னூலை நீதித் துறை தலைநகராகவும் உருவாக்கும் சட்ட மசோதாவுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

ஆகஸ்ட்

4: ஜம்மு-காஷ்மீர், குஜராத்தின் ஜூனாகத் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் பிரதமர் வெளியிட்ட புதிய வரைபடத்துக்கு இந்தியா கடும் கண்டனம்.

4: காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவம் ஈடுபடுத்தியது.

5: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

7: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 190 பேருடன் துபையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் விலகிச் சென்று விமானநிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி, துணை விமான உள்பட

21 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

11: பெண்களுக்கும் பரம்பரைச் சொத்துகளில் சம உரிமை என்ற சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

27: பட்டியலினப் பிரிவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

28: கரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 62,635-உயர்ந்து மெக்ஸிகோவை (பலி- 62,594) பின்னுக்குத் தள்ளி, உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மூன்றாவது நாடு என்ற நிலையை இந்தியா எட்டியது.

30: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,092 என்ற அளவுக்கு அதிகரித்து, உலகிலேயே ஒரே நாளில் 80,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட முதல் நாடு என்ற நிலையை இந்தியா எட்டியது.

31: கரோனா பாதிப்பு காரணமாக நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி இதுவரை இல்லாத அளவில் 23.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது.


செப்டம்பர்

2 : கிழக்கு லடாக்கில் சீனாவின் அத்துமீறல்களுக்குப் பதிலடியாக இளஞர்கள் மத்தியில் பிரபலமான "ப்ப்ஜி' உள்பட 118 செயலிகளுக்கு இந்தியா தடை விதிப்பு.

4: கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக 40 லட்சம் எண்ணிக்கையை இந்தியா கடந்தது.

7: முழுவதும் உள்நாட்டிலேயே டி.ஆர்.டி.ஓ. சார்பில் அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வாகனம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

10: அமெரிக்க அயல்நாட்டு ஏஜென்ட்ஸ் பதிவுச் சட்டம் 1938-இன் கீழ் இந்தியாவிலேயே முதல் கட்சியாக "பாஜகவின் அயல்நாட்டு நட்புக் குழு' என்ற கிளை அமைப்பை பாஜக பதிவு செய்தது.

17: நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரும் சிரோமணி அகாலி தளம் கட்சி எம்.பி.யுமான ஹர்சிம்ரத் கௌர் பாதல் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

20: மத்திய அரசு அறிமுகம் செய்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்ட மசோதாக்களில், இரண்டு மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

21: இந்திய கடற்படை வரலாற்றில் முதன் முறையாக ரித்தி சிங், குமுதினி தியாகி என்ற இரண்டு பெண் அதிகாரிகள், போர் கப்பலிலிருந்து தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

27: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய வேளாண் சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

29: உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட 19 வயது இளம் தலித் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

30: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்து லக்னௌ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


அக்டோபர்

1: முக்கியப் பிரமுகர்களுக்கான இந்தியாவின் முதல் விமானமான போயிங் 777-300 இஆர் அமெரிக்காவில் இருந்து தில்லி விமான நிலையம் வந்தடைந்தது.

6: லேசான கரோனா தொற்று உள்ளவர்களுக்கு ஆயுர்வேத மூலிகைகள் அடங்கிய கஷாயம் வழங்க மத்திய அரசு பரிந்துரை.

7: போராட்டத்துக்காக பொது இடத்தை ஆக்கிரமிப்பது ஏற்கத்தக்கதல்ல; பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தில்லி ஷாகீன் பாக் போன்ற தொடர் போராட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பு.

12: பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

13: ஜிஎஸ்டி வரி வருவாய் குறைவால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 20 மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு ஒப்புதல்.

13: ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி 14 மாதங்களுக்குப் பிறகு விடுவிப்பு.

26: வாஜ்பாய் ஆட்சியில் நிலக்கரி துறை அமைச்சராக இருந்த திலீப் ராய், அத்துறை முன்னாள் கூடுதல் செயலர் பிரதீப் குமார் பானர்ஜி உள்ளிட்டோருக்கு 1999-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை.

27: ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து.

28: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலர் எம்.சிவசங்கரை கைது செய்தது அமலாக்கத் துறை.

29: புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தனே பொறுப்பு என்பதை பாக். நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார் அந்நாட்டு மூத்த அமைச்சர்.

31: மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.


நவம்பர்

2: நியூஸிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரானார் பிரியங்கா ராதாகிருஷ்ணன்.

4: தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்திப் பிரிவு தலைவர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தது மகாராஷ்டிர போலீஸ்.

7: 10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

11: தொலைத்தொடர்பு, வாகன உற்பத்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய 10 துறைகளுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

12: சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.2.65 லட்சம் கோடி மதிப்பிலான புதிய பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

16: பிகார் முதல்வராக 7-ஆவது முறையாகப் பதவியேற்றார் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார். பாஜக சார்பில் இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு.

23: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என்று தில்லி, குஜராத் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம். தில்லி, குஜராத், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

24: சீனாவைச் சேர்ந்த மேலும் 43 செயலிகளுக்கு மத்திய அரசு தடை.

27: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகளில் தில்லிக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி.


டிசம்பர்

8: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கங்கள் அமைதி வழியில் முழு அடைப்பு போராட்டம்.

9: தனியார் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள விகிதத்தில் 50 சதவீதத்துக்கு மேல் படிகள் இருக்கக் கூடாது என்ற திருத்தம் 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு.

9: நாடு முழுவதும் பொது இடங்களில் வை-ஃபை இணைய சேவை வழங்குவதற்கான "பி.எம். வாணி' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

10: தில்லியில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

15: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறாது என்று மத்திய அரசு அறிவிப்பு.

16: ரூ.3.92 லட்சம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றை விற்பனைக்கான ஏலத்தை வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

16: தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வுகாண குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

17: புதிய வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை.

21:  புதிய வகை கரோனா அச்சுறுத்தல் காரணாம பிரிட்டன் விமானங்களுக்கு மத்திய அரசு தடை

22:  கேளிக்கை விடுதியில் கரோனா விதிமுறையை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்து பிணையில் விடுவித்தது மும்பை காவல்துறை.

24:  ஐ.பி,எல். தொடரில் மேலும் 2 புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல்.

29:  திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com