'துண்டு ஒருமுறைதான் தவறும்': ஐபிஎல் 2021-இல் சத்தியத்தைக் காப்பாற்றிய தோனி!

2020 ஐபிஎல் தொடரில் சறுக்கினாலும், வலிமையுடன் திரும்ப வருவோம் என்ற கூற்றின்படி 2021-இல் கோப்பை வென்று சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
'துண்டு ஒருமுறைதான் தவறும்': ஐபிஎல் 2021-இல் சத்தியத்தைக் காப்பாற்றிய தோனி!


உலகெங்கிலும் உள்ள அனைத்து கிரிக்கெட் தொடர்களைக் காட்டிலும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரபலமாக இருப்பதற்குக் காரணம், ஒன்று தரம். மற்றொன்று, இதுதான் முடிவு என ரசிகர்கள் தீர்மானிக்க, கடைசி நொடியில்கூட முடிவுகள் மாறக்கூடிய அளவுக்கு திரைப்பட க்ளைமாக்ஸ் போல் ஏராளமான ட்விஸ்ட்களை ஐபிஎல் தொடர் கொண்டிருக்கும்.

ஐபிஎல் 2021-க்கு ட்விஸ்ட்:

இப்படி நிறைய ட்விஸ்ட்களை கொண்டிருக்கும் ஐபிஎல் தொடருக்கே இந்த வருடம் ட்விஸ்ட் வைத்தது கரோனா இரண்டாம் அலை. கரோனா காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர், அக்டோபரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால், 2021 ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்பதில் பிசிசிஐ திட்டவட்டமாக இருந்தது.

அதற்கேற்ப, ஒவ்வொரு ஐபிஎல் அணிக்கும் ஊர்கள் மாற்றப்பட்டன. பயணங்களைக் குறைக்கும் நோக்கத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. முதல் பாதி போட்டிகளை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தியிருந்தாலும், இறுதியில் கரோனாவே வென்றது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ரித்திமான் சஹா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சென்னை பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி என ஏராளமான வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 60 ஆட்டங்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்த இரண்டாம் அலையில் வீரர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள். டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தினர் பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பே அவர் விலகினார்.

ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வீரர்கள் மாலத்தீவில் இரண்டு வாரங்கள் தனிமையில் இருந்து பின்னரே நாடு திரும்பினர்.

நியூசிலாந்தைச் சேர்ந்த அனைவரும் நாடு திரும்பிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் டிம் செய்ஃபெர்ட் மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இங்கேயே தனிமைப்படுத்தப்பட்டார். குணமடைந்து நாடு திரும்பிய பிறகு, இந்தத் தருணங்களை அவர் விவரித்தது அனைவரையும் கண்கலங்கச் செய்தது. 

பிசிசிஐயின் விடாமுயற்சி:

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்களை செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இதில் பங்கேற்பது சந்தேகம் என்பது போன்ற செய்திகள் பிசிசிஐயின் திட்டமிடலுக்கு மத்தியில் வந்தன.

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருந்ததால், அது சர்வதேச கிரிக்கெட் வாரியங்களை சமாதானப்படுத்தியது. எவ்விதப் பிரச்னையும் இன்றி அனைத்து வீரர்களும் ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்றனர். ஐபிஎல் தொடரும் வெற்றிகரமாக நடைபெற்றது.

துண்டு ஒருமுறைதான் தவறும்:

ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிக முக்கியமானது. கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகமிக முக்கியமானது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அவர் களமிறங்கிய முதல் கிரிக்கெட் தொடர் ஐபிஎல் 2020. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.

இதற்கு முன்பு வரை சாதித்துக் காட்டி வந்த, சென்னையின் பலமாக இருந்த மூத்த வீரர்களே அந்தத் தொடரில் விமர்சனங்களாக மாறின. தோனியின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குறியானது. இளம் வீரர்களை அணியில் சேர்ப்பதற்கு அவர்களிடம் தீப்பொறியைப் பார்க்கவில்லை என முன்னெப்போதும் இல்லாத வகையில், வெளிப்படையாக தோனி கூறியது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது தலைமைப் பண்பைக் கேள்விக்குறியாக்கியது.

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குரல்கள் சப்தமாக ஒலிக்கத் தொடங்கின.

தோனி அளித்த வாக்குறுதி:

இத்தனை தோல்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் ரசிகர்களை இயங்கச் செய்தது தோனியின் இரண்டு வசனங்கள்தான். 2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தின் டாஸின்போது 'நிச்சயமாக சிஎஸ்கேவுக்கான என் கடைசி ஆட்டம் இது அல்ல' என்றார் தோனி. 'சென்னை சூப்பர் கிங்ஸ், வலிமையாக மீண்டு வருவதற்குப் பெயர்போனது. நிச்சயம் வலிமையாக மீண்டு வருவோம்' என்றார் தோனி.

இப்படிப்பட்ட முன்கதையுடன்தான், கேஜிஎஃப் படத்தில் வருவதுபோல தோனியின் சத்தியம் காப்பாற்றப்படுமா என்ற கேள்வியுடன் 2021 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தயாராகிறது. ஏலத்தில் பெரிய தொகைக்கு இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் மொயீன் அலி எடுக்கப்படுகிறார். ராபின் உத்தப்பா வருகிறார்.

முந்தைய தோல்வி காரணத்தால், மீண்டும் வயதைக் காரணம்காட்டி மொயீன் அலி, உத்தப்பா தேர்வுகள் விமர்சனங்களைச் சம்பாதித்தன. எனினும், அணிக்குத் தேர்வான உத்தப்பா, ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு பேசுகிறார், "நானும், தோனியும் சேர்ந்து விளையாடி நிறைய நாள்கள் ஆகிவிட்டன. திரும்ப தோனியுடன் சேர்ந்து விளையாடி ஒரு கோப்பை வெல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. அதை செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது."

ஆட்டம் ஆரம்பம்:

ஐபிஎல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸை எதிர்கொண்டு தோல்வியடைகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால், அடுத்த 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து, விமர்சனங்களை உமிழந்த உதடுகளால், இயல்பு நிலைக்குத் திரும்பியது சிஎஸ்கே என்று பாராட்டுகளைப் பெற்று ரசிகர்களிடம் நம்பிக்கையை விதைத்தது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 218 ரன்கள் குவித்தும் கைரன் பொலார்ட் அதிரடியால் தோல்வியடைந்தது சென்னை. முதல் பாதி ஐபிஎல் தொடரில் இதுவே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கடைசி ஆட்டம்.

வெற்றிநடைக்கு வேகத்தடை?

7 ஆட்டங்களில் 5 வெற்றி என நல்ல ஃபார்மில் பயணித்துக் கொண்டிருந்த சென்னை வெற்றி நடைக்கு வேகத்தடையாக வந்தது ஐபிஎல் ஒத்திவைப்பு.

ஒத்திவைப்பிலுள்ள மற்றொரு சிக்கல், இரண்டாம் பகுதி ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது. 2020-ஐல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஒரேயொரு ஐபிஎல் தொடர்தான் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னை நுழையாதது.

மீண்டும் ஆரம்பமாகிறது ஆட்டம்:

முதல் பகுதி கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸை இரண்டாம் பகுதி முதல் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது சென்னை. 20 ரன்களில் வெற்றி. ஒத்திவைப்பும், ஐக்கிய அரபு அமீரகமும் வேகத்தடையல்ல என மீண்டும் வெற்றி நடையைத் தொடர்கிறது சென்னை. 2-ம் பகுதி முதல் 4 ஆட்டங்களில் 4 வெற்றிகள் பெற்று, எந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆண்டுக்கு முதல் அணியாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதோ, அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆண்டுக்குப் பிறகு முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

வலிமையுடன் திரும்ப வருவோம் என்ற வாக்குறுதியை நிகழ்த்திக் காட்டினார் தோனி.

பிளே ஆஃப்புக்கு முன் மீண்டும் சரிவு:

இரண்டாம் பகுதியில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளைக் குவித்த சென்னை, அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்தது. பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் 1-க்கு முன்னேற முதலிரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதால், சென்னைக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், கடைசி 3 ஆட்டங்களில் சென்னை அணி தோல்வியை மட்டுமே சந்தித்தது. எனினும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகள் சென்னையை இரண்டாம் இடத்தில் அமரவைத்து குவாலிஃபையர் 1 விளையாட அனுமதித்தது.

பெரிதும் வீரர்களை மாற்றாத சென்னை அணி நிர்வாகம், சுரேஷ் ரெய்னாவின் மோசமான ஃபார்ம் காரணமாக கடைசி இரு லீக் ஆட்டங்களில் அவருக்குப் பதில் உத்தப்பாவைக் களமிறக்கியது.

குவாலிஃபையர் 1:

குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி 172 ரன்கள் விளாசியது. 173 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னைக்கு, முதல் ஓவரிலேயே பாப் டு பிளெஸ்ஸி ஆட்டமிழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சீசனில் சென்னையின் பலமே ருதுராஜ்-டு பிளெஸ்ஸி தொடக்கம்.

எனினும், உன்னுடன் சேர்ந்து நான் செய்யப்போகும் காரியம் பயங்கரமாக இருக்கும் என்பதுபோல ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து உத்தப்பா ஆடிய ஆட்டம் எதிரணியை வாயைப் பிளக்கவைத்தது.

ருதுராஜ் 70, உத்தப்பா 63 எடுக்க சென்னை அணி வெற்றியை நோக்கிச் சென்றது. எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டன.

தோனி.. தோனி.. தோனி..:

களமிறங்கிய 2-வது பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டு அதகளப்படுத்தினார் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டன. டாம் கரன் வீசிய முதல் பந்தில் மொயீன் அலி ஆட்டமிழக்கிறார். பரபரப்பு அதிகரிக்கிறது. ஆனால், எவ்வித சலசலப்பும் இல்லாமல் அடுத்த 3 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி சென்னையை 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார் தோனி.

தோனியின் இந்த பினிஷிங் குறித்து விராட் கோலி பாராட்டிப் பதிவிட்ட ட்வீட்தான் 2021-இல் இந்தியாவில் விளையாட்டுப் பிரிவில் அதிகம் லைக் செய்யப்பட்டு ரீட்வீட் செய்யப்பட்ட ட்விட்டர் பதிவு.

இறுதி:

இறுதிப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. துபையில் 2-வது பேட்டிங் பிடிக்கும் அணியே வெற்றி பெற்று வந்த நிலையில், இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது.

பாப் டு பிளெஸ்ஸி 86 ரன்கள் விளாச, கடைசி நேரத்தில் உத்தப்பாவும், மொயீன் அலியும் அதிரடி காட்ட 192 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கியது.

ஆனால், ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த கொல்கத்தா மிடில் ஆர்டரை பயன்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது. கொல்கத்தாவை 165 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி, ஒரு வரலாற்று வெற்றிக் கதையை எழுதியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
 
2020-இல் அவமானங்களையும், விமர்சனங்களையும் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸை மீண்டும் ஒரு முறை (4-வது முறையாக) கோப்பை வெல்லச் செய்து, இதோ நாங்கள் வலிமையாக வந்துவிட்டோம் என்பதை செயலில் செய்து காட்டினார் தோனி.

ஒரு சரிவுக்குப் பிறகான சென்னையின் இந்த வெற்றி, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், கொண்டாட்டத்தையும் மட்டுமின்றி கரோனா போன்ற நெருக்கடி சூழல்களுக்கு மத்தியில் வெற்றிக்கான மனஉறுதியையும் தந்திருக்கிறது.

சிஎஸ்கே, சிஎஸ்கேதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com