மறக்க முடியாத தேர்தல் 2021: பாஜக வெற்றி முதல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை

கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளின்றி 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளின்றி 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து இரு முறை ஆட்சியைப் பிடித்ததைப்போன்று மூன்றாவது முறையும் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக களமிறங்கியது. முதல்வர் கனவை நனவாக்கும் முயற்சியில் திமுக களம் கண்டது.

இதில் பலதரப்பினரின் யூகங்களும், கருத்துக்கணிப்புகளும் மெய்யாகும் வகையில், பாஜக கூட்டணியை வீழ்த்தி திமுக மாபெரும் வெற்றி பெற்றது. 1967-ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தார்.

16-வது சட்டப்பேரவைத் தேர்தல்

தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அதிமுகவின் பதவிக்காலம் மே 23, 2021-ஆம் தேதியுடன் முடிந்தது. இதனால் ஏப்ரல் 6-ஆம் தேதி 16-வது சட்டப்பேரவையைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

வாக்குப் பதிவு நடைபெற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மே 2-ஆம் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல், தமிழக தேர்தல் முடிவு  அறிவிப்புக்கு காரணம் கூறப்பட்டது.

தேர்தல் அறிவிப்பு - மார்ச் 12

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - மார்ச் 19

வேட்பு மனு பரிசீலனை - மார்ச் 20

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 22

வாக்குப்பதிவு - ஏப்ரல் 6

தேர்தல் முடிவுகள் - மே 2

சூடுபிடித்த தேர்தல் களம் 2021

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக பிரசாரத்தைத் தொடங்கியதால் 2021-ன் ஆரம்பம் முதலே தேர்தல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியது. தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி என முதல் முறையாக 5 முனைப் போட்டி நிலவியது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. தேமுதிக நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுக கூட்டணியிலிருந்து விலகி அமமுகவுடன் கூட்டணி வைத்தது.

மக்கள் நீதி மய்யத்துடன் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டன. சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டது.

நட்சத்திர பிரசாரங்கள்:

தமிழக தேர்தலில் நட்சத்திர பிரசாரங்களின் பங்கு முக்கிய பங்கு வகித்தது. அந்தவகையில் ’தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டார்.

யூடியூபர்ஸுடன் சமைப்பது, குழந்தைகளுடன் உரையாடுவது, முதியோர்களுடன் உண்பது போன்ற ராகுலின் செயல்பாடுகள் தேர்தலுக்கு உதவியதை விட தனிப்பட்ட முறையில் மக்களிடம் ராகுலுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.

இதேபோன்று தேசிய ஜனநாய கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்து பிரசாரத்திற்காக தமிழகம் வந்தனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வாக்குகளைக் கவரும் வகையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பிரசாரம் செய்தது மத அரசியலுக்கு மட்டுமில்லாமல், கலவரங்களுக்கும் வழிவகுத்தது.

பாஜக வலுவாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட்டதால், தெற்குப் பகுதியில் பாஜகவின் பிரசாரம் அதிகமாக இருந்தது.

முதல்வர் வேட்பாளர்களும் தொகுதிகளும்:

ஐந்து முனைப்போட்டியை உறுதிப்படுத்தும் வகையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேமுதிக அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதிமுகவில் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக எழுந்த மனக்கசப்பிற்கு மருந்தாக அமமுக கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

முதல்வர் வேட்பாளர்களான பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

அமமுக பொதுச் செயலாளர் கோவில்பட்டியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அங்கு கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்தார்.

வேட்பாளர்களின் விவரங்கள்

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 3998 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் 3585 பேர் ஆண்கள், 411 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் தீர்ப்பு:

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் 72.78% வாக்குகள் பதிவானது. சிறுசிறு பிரச்னைகள் எழுந்தாலும், பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணி் 159

அதிமுக கூட்டணி 75

மநீம கூட்டணி 0

அமமுக கூட்டணி 0

நாம் தமிழர் 0

யாருமே எதிர்பார்க்காத வகையில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களை முதல்முறை சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்தது.

முதல்முறை முதல்வரான மு.க.ஸ்டாலின்:

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று முதல்முறை மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதும் இந்த ஆண்டுதான். 14 வயது முதல் அரசியலில் இருந்து வரும் அவர், தனது 67-வது வயதில் முதல்வரானார். கருணாநிதி எனும் தலைமை இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக  வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com