தமிழகம் 2021

கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு திறப்பு. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அனுமதி.
தமிழகம் 2021

ஜனவரி

19:கரோனா பேரிடர் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு திறப்பு. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அனுமதி.

25:புதுச்சேரி பொதுப் பணித் துறை அமைச்சர் ஏ நமச்சிவாயம் ராஜிநாமா.

27:சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

27:சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு கர்நாடகத்தின் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வி.கே.சசிகலா விடுதலை.

28:சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா நினைவில்லமான வேதா நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார்.

31:தமிழக தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன் நியமனம்.

பிப்ரவரி

5: கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்பிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக 110-ஆவது விதியின் கீழ் பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.

7: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சென்னையில் உள்ள சொத்துகள் அரசுடைமை.

12:விருதுநகர் மாவட்டம், அச்சன்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி உள்பட 18 பேர் உயிரிழப்பு.

12:கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகள், விருப்பத்துக்கேற்ப தாய் அல்லது தந்தையின் ஜாதி பெயரை சான்றிதழில் குறிப்பிட அனுமதி.

16:புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.

22:புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. முதல்வர் வி.நாராயணசாமி ராஜிநாமா.

25:புதுச்சேரியில் குடியரசு தலைவரின் ஆட்சி அமலானது.

25:மாநில பாடத் திட்டத்தில் பயிலும் 9, 10, பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சியடைந்ததாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.

26:வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்.

மார்ச்

3: அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்தார்.

19: ஏழு ஜாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வகை செய்யும் திருத்தப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஏப்ரல்

9: கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறி மகாபலிபுரம் கடற்கரையில் கட்டடங்கள் கட்டிய தங்கும் விடுதி உரிமையாளருக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 10 கோடி அபராதம் விதித்தது.

மே


2:பத்தாண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி.

7:தமிழகத்தின் 26-ஆவது முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

9: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டார்.

21: தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 36, 184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

29:கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புநிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 


ஜூன்

1:தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க தமிழக அரசு முடிவு.

3:சென்னை கிண்டியில் ரூ.250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

4:வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு; ஒரு சிங்கம் உயிரிழப்பு.

5: கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து.
30: தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சி.சைலேந்திரபாபு நியமனம்.

ஜூலை

8: தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை நியமனம்.

14 மருத்துவக் கல்வியில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழு, தனது 165 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.

19: பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி.

24: வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.

26: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணை வெளியீடு, பேரவையில் மசோதா தாக்கலான பிப்.26-ஆம் தேதி முன்தேதியிட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக அறிவிப்பு.


ஆகஸ்ட்

4: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், இரண்டு வழக்குரைஞர் உள்பட 7 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை.

5:"மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

10:அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.

10:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு.

11:ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

13:தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் மீதான வரி ரூ.3-ஐ குறைத்தது தமிழக அரசு.

14: அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை வெளியிட்டது தமிழக அரசு.

24:தமிழகத்தில் மேலும் 6 மாநகராட்சி மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.

28:மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.

31:விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா பேரவையில் நிறைவேறியது.

செப்டம்பர்

8: தமிழக சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

9: தாமிரவருணி நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழைமையானது என்று தமிழக சட்டபேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடந்த அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது, அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

12: கும்பாபிஷேக விழாக்களில் சம்ஸ்கிருத பாடல்களுடன் தமிழ்ப் பாடல்கள், கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.

13:அரசு வேலையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக தமிழக அரசு அதிகரித்தது.

13: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றம்.

16: கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, நியமனங்களில் சமூக நீதியை அமல்படுத்துவதைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

16: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

18: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

20: புதிதாக 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ், தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்லூரிச் செலவுகள் அனைத்தையும் மாநில அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 

23: தவறான நடத்தை மற்றும் கையாடல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஏவி வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் வழக்குப் பதிவு.

26: கோயம்புத்தூரில் உள்ள விமானப் படை நிர்வாகக் கல்லூரிவளாகத்தில் பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இந்திய விமானப் படையின்லெப்டினன்ட் பிரிவு அதிகாரி கைது.

28: இந்த கல்வியாண்டில் 7 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் 850 மாணவர்களைச் சேர்க்க தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த எம்பிபிஎஸ் இடங்கள் 4,300-ஆக உயர்ந்தது.

29: கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள கிராமத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திலகர் (34), ஜெய்சங்கர்(49) ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்டம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


அக்டோபர்

1: மனிதர்கள் (4 பேர்), 12 கால்நடைகளை அடித்துக் கொன்ற "எம்டிடி 23' என அழைக்கப்பட்ட புலியைப் பிடிக்க தமிழ்நாடு தலைமை வனவிலங்கு காப்பாளர் சேகர் குமார் நிராஜ் உத்தரவு.

3: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகார்களின் அடிப்படையில், தனியார் பள்ளி ஆசிரியர் ஜி.ராஜகோபாலன் மீது குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை தாக்கல் செய்தது. மேலும், போக்சோ சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

11: முந்திரி ஆலையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், பண்ருட்டி நீதிமன்றத்தில் கடலூர் திமுகஎம்.பி., டிஆர்விஎஸ் ரமேஷ் சரணடைந்தார்.

12: ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு குடியமர்த்தப்படும் மக்களை நியாயமாகவும், மனிதாபிமானத்துடனும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஒரு வரைவு கொள்கைக் குறிப்பை வெளியிட்டது. இது, முன் மீள்குடியேற்றம்; மீள் குடியேற்றம்; புனர்வாழ்வு ஆகிய மூன்று கட்டங்களாக வரைவு செயல்முறையை மேற்கொள்ள பரிந்துரைக்கிறது.

12: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன.

15: தமிழகத்தில் இளம்வயது ஊராட்சித் தலைவராக செங்கோட்டை ஒன்றியத்தில் உள்ள தெற்குமேட்டில் இருந்து 21 வயதான கே.அனு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

18: விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை.

20: மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வையாபுரி, அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக 
நியமனம். 

26: கணவன் அல்லது பெற்றோரைப் பிரிந்து வாழும் ஒற்றைப் பெண்களுக்கு இனி "குடும்பமாக' அங்கீகரிக்கப்பட்டு, உணவு வழங்கல் துறையால் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிப்பு.

27:மரக்காணம் அருகே மூர்த்திகுப்பத்தில் நடைபெற்ற விழாவில், "இல்லம் தேடி கல்வி' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

28: கோயில் தங்கத்தை பணமாக்கும் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் லட்சியத் திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.


நவம்பர்

1:கல்வி, அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

6:சென்னையில் ஒரே நாளில் 230 மி.மீ. மழை பெய்ததால் நகரமே வெள்ளக்காடானது. 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில்வெள்ள நீர் புகுந்தது.

12: பாலியல் தொந்தரவால் கோவையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மிதுன் சக்ரவர்த்தி என்ற ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

15: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜனவரியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற நிலையில், 11 மாதங்களில் அவர் மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு நவ. 22-இல் ஆளுநர்ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

16: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஆன்லைனில் நடைபெற்று வந்த தேர்வுகள் இனிவரும் காலங்களில் கல்லூரிகளில் நேரடியாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவிப்பு.

20: இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில்தடய அறிவியல் துறையால் உருவாக்கப்பட்ட தடய மரபணு தேடல் மென்பொருளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

25: பலத்த மழை காரணமாக சென்னையில் வரலாறு காணாத வகையில் தக்காளி உள்ளிட்ட 10 காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ. 100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது.

டிசம்பர்

3:அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்மொழித் தாளை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவு. குரூப்-4 தேர்வில் பொது ஆங்கிலம் தாளுக்குப் பதிலாக பொதுத் தமிழைக் கட்டாயமாக்கியும் அரசாணை பிறப்பிப்பு.

6: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியும் போட்டியின்றி மீண்டும் தேர்வு.

8: நீலகிரி மாவட்டம் சூலுரில் இருந்து குன்னூர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நாட்டின் முதல் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழப்பு. இந்த விபத்தில் காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் டிச. 15-இல் உயிரிழப்பு.

15: தமிழகத்தில் முதன்முறையாக சென்னையைச் சேர்ந்த 47 வயது நபருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிப்பு. நைஜீரியாவிலிருந்து சென்னை திரும்பிய அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

18: சாலை விபத்துகளில் காயமடைந்தோருக்கு தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சையளிக்கும் "இன்னுயிர் காப்போம்' திட்டத்தை மேல்மருவத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

19: வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 55 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. 

20: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com