உலகம் 2021

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்ததை ஏற்காத அவரது ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
உலகம் 2021

ஜனவரி

6:  அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்ததை ஏற்காத அவரது ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். புதிய அதிபராக ஜோ பைடனைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கை நிகழ்ச்சியைக் குலைப்பதற்காக வந்த அவர்கள், அங்கிருந்த பொருள்களை நாசம் செய்தனர். இந்த வன்முறையைத் தூண்டியதாக டொனால்ட் டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

20: அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் (78), துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றனர்.

பிப்ரவரி

1:மியான்மரில் 2020, நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபர் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

23: நேபாள நாடாளுமன்றத்தை அப்போதைய பிரதமர் சர்மா ஓலி கலைத்தது செல்லாது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மார்ச்

29:ஆய்வகத்திலிருந்து கரோனா தீநுண்மி கசிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று உலக சுகாதார அமைப்பும் சீனாவும் கூட்டாக நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன.

30:ஹாங்காங் தேர்தல்களில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் போட்டியிடுவதைத் தடுக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல்

21: அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மீது முழங்காலிட்டு அமர்ந்து, அவர் உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த காவல் துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு (45) 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மே

31: சீனாவில் தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

ஜூன்

5: வரியில்லா அல்லது வரிச் சலுகை தரும் நாடுகளில் தலைமையகத்தை அமைத்துக் கொண்டு, பெரிய நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜி-7 நாடுகள் கையொப்பமிட்டன.

19: ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட இப்ராஹிம் ரய்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை

7: ஹைட்டி அதிபர் ஜோவனேல் மாய்ஸ் அவரது இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரின் மனைவி மார்ட்டினா காயமடைந்தார்.

11: பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவிலிருந்து விண்வெளிக்கு வெற்றிகரமாக சென்று வந்தார். தனியார் விண்வெளி சுற்றுலாவின் முதல் படியாக இந்தப் பயணம் அமைந்தது.

13: நேபாள பிரதமராக ஷேர் பகதூர் தேவுபா (75) 5-ஆவது முறை பொறுப்பேற்று சாதனை படைத்தார்.

18: இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட "பெகாசஸ்' உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள், எதிர்க்கட்சியினர் உளவுபார்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை எழுப்பியது.

ஆகஸ்ட்

15: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், அந்த நாட்டின் ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், தலைநகர் காபூலைக் கைப்பற்றினர். அதையடுத்து, பஞ்சஷேர் மாகாணம் தவிர நாட்டின் மற்ற அனைத்துப் பகுதிகளும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

16: தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அங்கு பெரும் குழப்பமும் அமளியும் ஏற்பட்டது.

17: முந்தைய அரசுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் பொது மன்னிப்பு  வழங்குவதாக தலிபான்கள் அறிவித்தனர்.

27: காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உள்பட 182 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர்

7: ஆப்கானிஸ்தானில் அமைக்கப்படும் இடைக்கால அரசுக்கு முல்லா முகமது ஹஸன் அகுண்ட் தலைமை வகிப்பார் என்று தலிபான்கள் அறிவித்தனர்.
25: நியூயார்க்கில் நடைபெற்ற 76-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அக்டோபர்

4: ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது. 

31: பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சர்வதேச நாடுகள் விவாதிப்பதற்கான ஐ.நா. மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

நவம்பர்

19: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மயக்க மருந்து செலுத்த வேண்டியிருந்ததால், 85 நிமிடங்கள் அதிபர் பொறுப்பை வகித்தார் துணை அதிபர் கமலா ஹாரிஸ். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெற்றார். 

24: ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக மக்தலேனா ஆண்டர்சன் பொறுப்பேற்று சாதனை படைத்தார்.

29: தென் ஆப்பிரிக்காவில் நவ. 24-இல் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட வேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வகை கரோனா, கவலைக்குரிய வகையைச் சேர்ந்தது என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.

டிசம்பர்

6: மியான்மரில் ராணுவத்தால் கலைக்கப்பட்ட அரசின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு, இரு வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

8: ஜெர்மனியில் ஏஞ்சலா மெர்கெலின் 16 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய பிரதமராக முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஒலாஃப் ஷோல்ஸ் பதவியேற்றுக்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com