2021-இல் சுற்றுலாத்துறையில் கரோனா தாக்கமும்... வேலை இழப்புகளும்..!

உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி, சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.
2021-இல் சுற்றுலாத்துறையில் கரோனா தாக்கமும்... வேலை இழப்புகளும்..!


இந்தியா ஒரு மாறுபட்ட புவியியல், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு மற்றும் திருவிழாக்கள் கொண்ட நாடாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருகிறார்கள். இது உள்ளூர் சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு நேரடியாக பங்களிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

2020 இல் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, பொது முடக்கம், போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கிப் போனது. 2021 இல் கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கணிசமாக குறைந்து இருக்கும் நிலையில், சுற்றுலாத்துறையும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதி, சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.

கரோனா காரணமாக,  நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பின்னர், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், சுற்றுலாத் துறையில் தொற்றுநோய் “குறிப்பிடத்தக்க” வேலை இழப்பை ஏற்படுத்தியதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் கூடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்கள் ரமேஷ் கௌசிக் மற்றும் ராஜு பிஸ்டா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு என்சிஏஇஆர் அறிக்கையை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டது. அதில், முதல் காலாண்டில் 14.5 மில்லியன் பேரும், இரண்டாவது காலாண்டில் 5.2 மில்லியன் பேரும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பொதுமுடக்கம் விதிக்கப்பட்ட பின்னர், 20-21 மூன்றாவது காலாண்டில் மட்டும் 1.8 மில்லியன் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்தது. 

நாட்டில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கான பொருளாதார இழப்புகள் மற்றும் மீட்பதற்கான கொள்கைகள்’ என்ற தலைப்பில் என்சிஏஇஆர் நடத்திய ஆய்வில்,  "கரோனாவால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ளவும், நாட்டில் சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சிக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்கவும்" சுற்றுலா அமைச்சரின் தலைமையில் ஒரு பணிக்குழுவையும் அது அமைத்தது. இருப்பினும், சுற்றுலாத் துறையில் மாநிலம், யூனியன் பிரதேசங்கள் வாரியாக கரோனாவின் பாதிப்பை மதிப்பிடுவதற்கு முறையான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை.

2020 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் அந்நியச் செலாவணி வருவாய் 2019 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 76.3 சதவிகிதம் குறைந்துள்ளது. ஜிடிபி-யில் கிட்டத்தட்ட 2.5 சதவிகித பங்கு வகிக்கும் இந்தியாவின் பயணங்கள் மற்றும் சுற்றுலாத் துறை, கரோனா பெருந்தொற்று வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கும் சுற்றுலாத்துறை சார்ந்த வணிகங்களுக்கு அரசாங்கம் உதவிட வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் தொற்று நோயால் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பெரும் நிதி இழப்பை தெரிவிக்கும் விதமாக, ஹோட்டல்கள் முதல் டிராவல்ஸ் மற்றும் டூர் ஆப்ரேட்டர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட, சுற்றுலாத் துறையின் பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு பல மனுக்களை அளித்தனர்.

இதன் விளைவாக சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் வேலைகளின் நம்பகத்தன்மையில், நாட்டில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் வணிகங்களின் கூட்டமைப்பான பெய்த், சட்டப்பூர்வ கடமைகளில் இருந்து விலக்கு கோரியது, மேலும் மாநிலங்கள் சுற்றுலாத்துறை சார்ந்த வணிகங்களுக்கு அபராதம் இல்லாமல் 100 சதவிகிதம் தள்ளுபடியை வழங்க வேண்டும் என்று கூறியது. அதாவது மின்சாரம் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள், கலால் வரிகள், சொத்து வரிகள், மாநிலங்களுக்கு இடையேயான சுற்றுலாப் போக்குவரத்து வரிகள், எஸ்ஜிஎஸ்டி வரி மற்றும் அனைத்து உள்ளூர் வரிகளில் தள்ளுபடி சலுகைகள் கோரியது. 

2021-22 நிதியாண்டில் காலாவதியாகும் அனைத்து உரிமங்கள், அனுமதிகள் ஆகியவற்றை எந்த நிதிக் கட்டணங்கள் அல்லது அபராதங்கள், பயன்படுத்தப்படாத ஜிஎஸ்டியை திரும்ப அளிக்கவும் தொழில் அமைப்புகள் கோரிக்கை வைத்தது. சுற்றுலாத்துறைக்கு நிதியமைச்சர் எந்தவித ஊக்கம் அளிக்கும் அறிப்புகளையும் அறிவிக்காதது சுற்றுலாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. ஏனெனில் வணிகங்கள் பணக் கொள்கைத் தலையீடுகளைக் காட்டிலும் வணிகத்தைத் தொடர பண வரவுகள் தேவை என்று கூறியுள்ளது.

வரும் நாள்களில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக தொடங்கினால், சர்வதேச அளவில் சுற்றுலாத்துறை இன்னும் இழப்புகளை சந்திக்க நேரிடும். இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com